பெண்கள் அதிகாரம் பெற அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி மொபைல் செயலி மூலம் நாடு முழுவதும் உள்ள சுயஉதவிக்குழு பெண்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது சுயஉதவிக்குழுப் பெண்கள், தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும், அனுபவங்களையும் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், கிராமப்புற மேம்பாட்டில் சுயஉதவிக்குழு பெண்களின் பங்கை வெகுவாக பாராட்டினார். பொருளாதார சுதந்தரம் பெற்ற பெண்கள், சமூக தீமைகளுக்கு எதிரான அரணாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு அதிகாரம் தருவதாகவும், விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற துறைகள் பெண்களின் பங்களிப்பில்லாமல் வளர்ச்சி கண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்தார். கிராமப்புற பெண்கள் அதிகாரம் பெறுவதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றம் சாத்தியமாகும் என்றும் மோடி கூறினார்.