விளையாட்டு

"கப்பு முக்கியம் பிகிலே" இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வாழ்த்தும் ரசிகர்கள் !

"கப்பு முக்கியம் பிகிலே" இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வாழ்த்தும் ரசிகர்கள் !

jagadeesh

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்பர்ன் நகரில் சர்வதேச மகளிர் தினமான இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்திய மகளிர் படை வெல்லுமா என்ற ஆவல் மேலோங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 7-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் 10 அணிகள் இடம் பெற்றன. கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

ஒரு லட்சத்து 24 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதிக் கொண்ட மெல்பெர்ன் மைதானத்தில் நேற்று வரை 75 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இந்தப் போட்டிக்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்றத்தீரும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தப் போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாட்டினர் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 இறுதி ஆட்டத்தின் நடுவா்களாக நியூசிலாந்தின் கிம் காட்டன், பாகிஸ்தானின் ஆஸன் ராஸா ஆகியோர் கள நடுவர்களாக இருப்பார்கள்.

இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமா் நரேந்திர மோடி, பிசிசிஐ தலைவா் கங்குலி உள்பட பலா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் ட்விட்டர் பக்கத்தில் "ஹாய் நரேந்திர மோடி, மகளிர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மெல்பர்னில் நடைபெறுகிறது. இரு அணிகளுமே தலைசிறந்தவைதான், இந்தப் போட்டியைக் காண பெரும் கூட்டம் இருக்கும். மிகப் பெரிய இரவாக இருக்கும். விறுவிறுப்பான போட்டியாக இருக்கும். ஆனால் இறுதியாக ஆஸ்திரேலியாதான் வெல்லும்" எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பிரதமா் மோடி "இரு அணிகளுக்குமே எனது நல்வாழ்த்துகள். மகளிர் தினத்தில் இந்த ஆட்டம் நடப்பது சிறப்பானது. சிறந்த அணி வெல்லட்டும்" என தெரிவித்தார். பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி "இறுதிச் சுற்றில் நுழைந்ததன் மூலம் பெருமையைத் தேடித் தந்துள்ளனா். பட்டத்தைக் கைப்பற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.

நம் தமிழ்நாட்டு ரசிகர்களும் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இதில் விஜய் நடித்து பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "பிகில்" திரைப்படத்தில் வரும் வசனத்தை வைத்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக "கப்பு முக்கியம் பிகிலே" என ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் கூறி வருகின்றனர்.