விளையாட்டு

‘தோனியின் கேப்டன்சியில் விளையாடியது எனது ஆட்டத்தை மெருகேற்றியது’ வாஷிங்டன் சுந்தர்

‘தோனியின் கேப்டன்சியில் விளையாடியது எனது ஆட்டத்தை மெருகேற்றியது’ வாஷிங்டன் சுந்தர்

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் தோனியின் தலைமையின் கீழ் விளையாடியதே தனது ஆட்டம் மெருகேற காரணம் என தெரிவித்துள்ளார். 

ஆர்.சி.பி கேப்டன் கோலியின் மனதை வென்ற சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்க்டன் சுந்தர் பவர் பிளேயில் எக்கானமியாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் தனது ஆட்டம் குறித்தும் அண்மையில் சொல்லியிருந்தார் அவர்...

“2017 ஐபிஎல் சீசனில் ரைசிங் பூனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக மாஹி (தோனி) பாயின் வழிகாட்டுதலின் கீழ் நான் விளையாடினேன். அப்போது கிரிக்கெட் குறித்து நிறைய அவரிடம் கற்றுக் கொண்டேன். அது என்னை நானே ஒரு முழுமையான கிரிக்கெட் வீரனாக தகவமைத்துக் கொள்ள உதவியது. அதோடு அன்று முதல் இன்று வரை பவுலராகவும் நிறைய கற்று வருகிறேன். பந்து வீசும் போது பந்தை லேட்டாக வீசுவது பேட்ஸ்மேனின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொண்டு அதற்கு எதிராக பந்து வீச உதவுகிறது. அது எனது பந்து வீச்சின் பிளஸ் என கூட சொல்லலாம். அதனால் முடிந்தவரை பந்தை லேட்டாக எனது கைகளிலிருந்து ரிலீஸ் செய்வேன். அதற்கு எனது உயரமும் கைகொடுத்து வருகிறது என நம்புகிறேன். 

கேப்டன் கோலி என் மீது வைத்துள்ள நம்பிக்கையை கண்டு நான் அசந்து நிற்கிறேன். பவர் பிளே ஓவரின் போதும், முக்கியமான தருணங்களிலும் பந்து வீச எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார். என்னை போன்ற FINGER ஸ்பின்னர்கள் மீது கேப்டன் வைக்கின்ற நம்பிக்கை மிக முக்கியமானதாகும் அதை தான் கோலி செய்து வருகிறார். 

பேட்ஸ்மேனின் பார்வையிலிருந்து சிந்தித்து பந்து வீசிக் கொண்டிருக்கிறேன். ஆர்.சி.பி அணிக்காக நான் பேட் செய்து ஆட்டங்களை வென்று கொடுக்க விரும்புகிறேன். அதனால்  இப்போது கொஞ்சம் பேட்டிங் பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கான வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமையும் போது நிச்சயம் அதை செய்வேன். 

அதே போல இந்திய அணிக்காக அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புகிறேன். அதனால் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நடப்பு சீசனில் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள வாஷிங்க்டன் சுந்தர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பவுலிங் எக்கானமி 4.90. 

பெங்களூரு அணி பஞ்சாப் அணியுடன் ஷார்ஜாவில் இன்றைய லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது.