விளையாட்டு

வில்லியம்ஸை கலாய்த்தது ஏன்? - விராட் கோலி விளக்கம்

வில்லியம்ஸை கலாய்த்தது ஏன்? - விராட் கோலி விளக்கம்

webteam

எதிரணியை மதிக்கவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். 

இந்தப் போட்டியின் போது விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் வில்லியம்ஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். வில்லியம்ஸ் வீசிய ஒரு பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோலி ஆரவாரமாக வில்லியம்ஸ் கொண்டாடும் ‘நோட் புக்’ ஸ்டைலில் கொண்டாடினார். கடந்த 2017 ஆம் ஆண்டில், விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய வில்லியம்ஸ்  ‘நோட் புக்’ ஸ்டைலில் அவரை வழியனுப்பினார். இதற்கு கோலி தற்போது தகுந்த பதிலடி கொடுத்தார். 

இது தொடர்பாக ஆட்டத்தின் முடிவில் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “ஜமைக்காவில் நடைபெற்ற போட்டியின் போது எனக்கு நோட் புக் வழி அனுப்புதல் கிடைத்தது. அதனால் அதை இன்று நான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆகவே நோட்புக்கில் சில டிக்குகளை செய்தேன். எனினும் ஆட்டம் முடிந்த பிறகு நாங்கள் அனைவரும் புன்னகையுடன் கைக் குலுக்கினோம். அதுதான் கிரிக்கெட் விளையாட்டு. களத்தில் கடினமாக விளையாடினாலும் எதிரணிக்கு எப்போதும் மதிப்பு அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.