பாராலிம்பிக்ஸ் pt web
விளையாட்டு

களைகட்டிய பாராலிம்பிக்ஸ் தொடக்கவிழா... அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள்.. சாதிக்க துடிக்கும் தமிழர்கள்

பாரிஸ் நாட்டில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்..

PT WEB

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில், மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சாம்ப்ஸ் எலிசீஸ் மற்றும் பிளேஸ் டி லா கான்கார்ட்டில் நடைபெற்ற துவக்க விழாவில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்று, போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில், பிரான்ஸ் விமான படையினரின் சாகச நிகழ்ச்சியும், மாற்றுத்திறனாளி கலைஞர்கள் அரங்கேற்றிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொடர்ந்து, பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

பாராலிம்பிக்ஸ் போட்டிகளை பொருத்தவரை, இந்தியாவிலிருந்து 84 வீரர், வீராங்கனைகள் 12 விதமான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இது இதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையாகும்.. இதற்கு முன் டோக்கியோ பாரலிம்பிக்ஸில் 54 பேர் பங்கேற்றதே, இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது.

தமிழ்நாட்டிலிருந்து இந்த பாராலிம்பிக்ஸில், உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு, பாட்மிண்டனில் சோலைமலை சிவராஜ், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், மனிஷா ராம்தாஸ், பவர் லிப்ட்டிங்கில் கஸ்தூரி ராஜாமணி என 6 பேர் பங்கேற்றுள்ளனர்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வென்ற ஈட்டி ஏறிதல் வீரர் சுமித் அண்டில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லேகரா ஆகியோர், மீண்டும் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரியோ டி ஜெனிரோ பாராலிம்பிக்ஸில் தங்க பதக்கமும், டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளியும் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரிமுத்து தங்கவேலு மீதும் அனைவரது கவனமும் உள்ளது.

கடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக 54 பேர் பங்கேற்றிருந்தனர். அந்த பாராலிம்பிக்ஸில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றது. இந்த முறை அதைவிட அதிகமானோர் பங்கேற்றுள்ள நிலையில், கடந்த முறையை விட இந்த முறை அதிகமான பதக்கங்கள் இந்தியாவின் வசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.