சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பன்ட் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
சென்னையில் நேற்று இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இன்று 600 ரன்கள் எடுத்து இங்கிலாந்து டிக்ளர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி விரைவாக எஞ்சிய விக்கெட்டுகளை இழந்து 578 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.
இதில் ரோகித் சர்மா 6 ரன்களில் அவுட்டானார். விரைவாக ரன்களை சேர்த்து வந்த சுப்மன் கில்லும் 29 ரன்களுக்கு அவுட்டானார். உணவு இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளைக்கு பின்பு கோலி 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறியது. இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் பெஸ் 2 விக்கெட்டை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பன்ட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அதேபோல புஜாரா நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்த நிலையில் 73 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரமாதமாக விளையாடிய பன்ட் 91 ரன்கள் எடுத்திருந்போது அவுட்டானார். இம்முறையும் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இந்த இன்னிங்ஸில் அவர் மொத்தம் 5 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளை விளாசினார்.
ரிஷப் பன்ட் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆவது முறையாக 90 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இப்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.