விளையாட்டு

308 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி : இலக்கை எட்டுமா தென்னாப்பிரிக்கா ?

308 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி : இலக்கை எட்டுமா தென்னாப்பிரிக்கா ?

webteam

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 308 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 30வது லீக் போட்டி பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான இமாம் உல் அக் மற்றும் ஃபாகர் ஜமான் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இமாம் 44 (58) மற்றும் ஜமான் 44 (50) ரன்கள் எடுத்து இருவருமே அரை சதத்தை எட்டாமல் வெளியேறினர்.

பின்னர், வந்த பாபர் அஸாம் தனது பாணியில் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் முகமது ஹஃபீஸ் 20 (33) ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த ஹாரிஸ் சொஹைல் யாரும் எதிர்பாராத விதமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாபர் 69 (80) ரன்களில் அவுட் ஆக, மறுபுறம் ஹாரிஸ் அணியின் ரன்களை உயர்த்தினார். அவரது அதிரடியால் பாகிஸ்தான் அணி 300 ரன்களை கடந்தது.

இறுதி ஓவர் வரை பேட்டிங் செய்த அவர் 49.5வது ஓவரில் 89 (59) ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 308 ரன்கள் குவித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் அணியின் கேப்டன் சார்ஃப்ராஸ் 8வது இடத்தில் களமிறங்கியது சில கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் நிகிடி 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தஹிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.