விளையாட்டு

சாகித் அப்ரிடி-யின் 21 ஆண்டு கால கிரிக்கெட் பயணம் நிறைவு..!

சாகித் அப்ரிடி-யின் 21 ஆண்டு கால கிரிக்கெட் பயணம் நிறைவு..!

webteam

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சாகித் அப்ரிடி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி(36) டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அப்ரிடி-யின் 21 ஆண்டு கால, சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு, கென்யா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய‌ அப்ரிடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். டெஸ்டில் 5 சதங்கள் உள்பட ஆயிரத்து 716 ரன்கள் எடுத்துள்ளார். 398 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சாகித் அப்ரிடி, 6 சதங்கள் உட்பட 8 ஆயிரத்து 64 ரன்கள் குவித்துள்ளார்.

இதேபோன்று 20 ஓவர் கிரிக்கெட்டில், 98 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 405‌ ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங்கைப் போன்று பந்துவீச்சிலும் அப்ரிடி ‌வியக்க வைத்துள்ளார். 27 டெஸ்ட் போட்டியில் 48 விக்கெட்களையும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 395 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். இதேபோன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில், அப்ரிடி 97 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

தொடக்க காலத்தில் பேட்டிங்கில் அசத்திய அப்ரிடி, பிற்பகுதியில் பந்துவீச்சாளராகவும் ஜொலித்தார். ரசிகர்கள் இவரை ‘பூம் பூம்’ என்ற புனைப்பெயரில் அழைப்பதுண்டு. 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து கடந்த ஆண்டு விலகிய அப்ரிடி, சக வீரராக பாகிஸ்தான் அணியில் விளையாடுவேன் எனத் தெரிவித்திருந்தார். எனினும் தேர்வுக் குழுவினர், அவரை புறக்கணித்ததால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகும் முடிவை அப்ரிடி அறிவித்துள்ளார்.