விளையாட்டு

தப்புக் கணக்கு போட்ட ஆஸ்திரேலியா - தவிடு பொடியாக்கிய பாபர் அசாம், ரிஸ்வான்

தப்புக் கணக்கு போட்ட ஆஸ்திரேலியா - தவிடு பொடியாக்கிய பாபர் அசாம், ரிஸ்வான்

சங்கீதா

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இமாலய இலக்கை நிர்ணயித்து, வெற்றிபெற்றுவிடலாம் என  நினைத்த ஆஸ்திரேலிய அணியின் எண்ணத்தை, பாகிஸ்தான் வீரர்கள் தவிடு பொடியாக்கியுள்ளனர்.

பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தநிலையில், 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில், கடந்த 12-ம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இதையடுத்து, களத்தில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அதன்படி, அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 556 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தனர். அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தி, 160 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 36 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 72 ரன்களும், அலெக்ஸ் கேரி 93 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 148 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. இருப்பினும் ‘பாலோ-ஆன்’ வழங்காத ஆஸ்திரேலிய அணி, 408 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடியது. 3-வது நாள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா சிறிது நேரம் பேட்டிங் செய்து விட்டு 2 விக்கெட்டுக்கு 97 ரன்னில் டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 506 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 21 ரன்னுக்குள், இமாம் உல்-ஹக் (1 ரன்), அசார் அலி (6 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சி தந்தது.

எனினும், மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக்கும், கேப்டன் பாபர் அசாமும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஷஃபிக் 20 ரன்களில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை, ஸ்லிப்பில் நின்ற சுமித் கோட்டை விட்டார். அதன்பிறகுதான் ஆட்டம் ஆரம்பித்தது.

ஷஃபிக் - அசாம் கூட்டணியை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் அசைக்க முடியவில்லை. 2 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது 6-வது சதத்தை பதிவு செய்தார். 4-ம் ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 82 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அசாம் 102 ரன்களுடனும், ஷஃபிக் 71 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் - அப்துல்லா ஷஃபிக் ஜோடி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்துல்லா ஷஃபிக் 96 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு களமிறங்கிய ஆலம் 9 ரன்களில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு கூடிவந்தநிலையில், பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இணை 40 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்தது.

பாபர் அசாம் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், 425 பந்துகளை சந்தித்து, 196 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ரிஸ்வான் தாக்குப்பிடித்து, ஆட்டம் முடிவதற்கு முன்பாக சதத்தை நிறைவு செய்தார். 171.4 ஓவர்கள் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து டிரா செய்தது. ஆட்டத்தின் முடிவில் ரிஸ்வான் 104 ரன்களுடனும், நௌமன் அலி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

2 நாட்களில் 500 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்ற சிக்கலில் இருந்த பாகிஸ்தானை அந்த அணியின் பாபர் அசாம், ஷஃபிக், ரிஸ்வான் தோல்வியிலிருந்து மீட்டு போட்டியை டிரா செய்தனர். கராச்சி மைதானத்தில் இதுவரை ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியை வென்றதில்லை. எனவே இந்த போட்டியை ஆஸ்திரேலியா வென்று, அந்த அணி புதிய வரலாற்றை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டி டிரா ஆகியுள்ளது.