அண்டைநாடான பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இதன் காரணமாக, வரலாறு காணாத அளவுக்கு அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர பாகிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 7 பில்லியன் டாலர் தொகையை கடனாக பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தான் அணியும் சமீபகாலமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணி, தொடரிலிருந்து வெளியேறியது. இதனால், அவ்வணி மீது நிறைய விமர்சனம் கிளம்பியது. குறிப்பாக, அவ்வணியின் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டனே அணியை கடுமையாக சாடியிருந்தது கிரிக்கெட் உலகில் பேசுபொருளானது.
இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. வாரிய உறுப்பினர்கள் மற்றும் கேப்டன் பதவியில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ஊடகங்களின் அறிக்கைகளின்படி, தேசிய அணி வீரர்களான பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி போன்ற நட்சத்திரங்கள் கடந்த நான்கு மாத சம்பளத்தை இன்னும் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளன. அதுபோல், பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கும் நான்கு மாத சம்பளம் பாக்கி இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க: மத்திய கிழக்கில் போர் | இஸ்ரேலுக்கு இத்தனை நாடுகளா.. ஈரானுக்கு யார் யார் ஆதரவு?
2023 ஜூலை 1 முதல் ஜூன் 30, 2026 வரை மொத்தம் 25 மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு மூன்றாண்டு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், அணியின் மோசமான ஆட்டம் காரணமாக ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு, உலகக் கோப்பைக்கு முன்னதாக, வீரர்கள் ஒரு சாதகமான ஒப்பந்தத்தைப் பெற வாரியத்திற்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் தற்போதைய நிலைமை வியத்தகு முறையில் மாறிவிட்டது.
இதன்காரணமாகவே, ஜூலை முதல் அக்டோபர் வரை நான்கு மாதங்களாக அவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைக்கவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல், ஆகஸ்ட் 21, 2023 முதல் 23 மாத ஒப்பந்தத்தில் இருக்கும் மகளிர் அணி வீராங்கனைகளுக்கும் கடந்த நான்கு மாதங்களாக இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களது ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படும் எனவும், தற்போது அது செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இறந்தவர்களின் சாம்பல்.. எஞ்சும் உலோகங்கள்.. ரூ.377 கோடி வருமானம் ஈட்டும் ஜப்பான்!