champions trophy x page
விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி|”1996 நினைவிருக்கிறதா?” இந்தியா வராததால் கடைசிநேரத்தில் செக் வைக்கும் பாகிஸ்தான்!

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுப்பதால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதை பாகிஸ்தான் கைவிட முடிவு செய்துள்ளது.

Prakash J

இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் உள்விவகாரங்கள் மற்றும் இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் பதற்றமான சூழல் காரணமாக, 2008 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதேசமயத்தில், இரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்கள் கடைசியாக டிசம்பர் 2012ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2013 வரை இந்தியாவில் நடைபெற்றது. அதன்பிறகு அவர்கள் இருதரப்புத் தொடர்களில் விளையாடவில்லை. ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் பொதுவான நாடுகளில் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இத்தொடரில் கலந்துகொள்ள இந்திய அணி பாகிஸ்தானிற்குச் செல்லாது என பிசிசிஐ, கடந்த வாரம் உறுதியாக தெரிவித்திருந்தது. இத்தொடரில் விளையாட ஆரம்பம் முதலே இந்தியா மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தது.

இதையும் படிக்க: "இது அத்தனை எளிதாக இல்லை"-பெண்ணாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மகன்.. இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!

இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுப்பதால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதை பாகிஸ்தான் கைவிட முடிவு செய்துள்ளது. மேலும், இந்தியா மோதும் ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட வாரியம் ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இரு நாடுகள் இடையேயான பிரச்னைகள் தீர்க்கப்படும் வரை ஐசிசி அல்லது ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடுவதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிறுத்துமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்தி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு பாகிஸ்தான் ஹைபிரிட் மாடலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அல்லது தொடரை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவுக்கு இசைய வேண்டுமென ஐசிசி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தென்னாப்பிரிக்காவில் நடத்த பேச்சுவாரத்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இம்முறையும் தங்களுடைய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிக்க: பரப்புரையில் துப்பாக்கிச் சூடு| உச்ச பாதுகாப்பில் ட்ரம்ப் வீடு.. தோட்டத்தைச் சுற்றிவரும் ரோபோ நாய்!

இவ்விவகாரம் குறித்து முன்னாள்வீரர் பாசித் அலி, “சாம்பியன்ஸ் தொடரை 2 நாடுகளில் ஹைப்ரிட் மாடலில் நடத்தினால் பாகிஸ்தான் பங்கேற்காது. ஒருவேளை தங்கள் நாட்டுக்கு இந்தியா விளையாட வராமல் போனால் பாகிஸ்தானும் சாம்பியன்ஸ் ட்ராபியில் பங்கேற்காது. அதற்காக பாகிஸ்தானைத் தடை செய்தாலும் பரவாயில்லை. மேலும், பாகிஸ்தானுக்கு விளையாட இந்தியா வரவில்லையெனில் அந்த போட்டியை ரத்து செய்து அதற்கான 2 புள்ளிகளை ஐசிசி தங்களுக்கு கொடுக்க வேண்டும். 1996 உலகக்கோப்பை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் செல்லாததால், இலங்கைக்கு 2 புள்ளிகள் கொடுக்கப்பட்டது.

பாசித் அலி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வெவ்வேறு பிரிவில் போடுமாறு சொல்லிப் பாருங்கள். அதற்கு ஐசிசி மறுப்பு தெரிவிக்கும். ஏனெனில் பணத்தாலேயே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் விளையாடுகின்றன. ஒருவேளை அது ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட்டு பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லையெனில் எங்களுக்கு 2 புள்ளிகளை கொடுங்கள். இதற்கு முன்பாக அவ்வாறு நடைபெற்றுள்ளது. எனவே அதை மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

பாகிஸ்தான் தங்களுடைய அனைத்து போட்டிகளையும் சொந்த மண்ணிலேயே விளையாட வேண்டும். ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி தங்களுடைய நாட்டுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டால் பாகிஸ்தான் அதில் பங்கேற்கக் கூடாது. சாம்பியன்ஸ் டிராபியை அவர்களிடமிருந்து எடுத்து வேறு நாட்டில் நடத்தினால் பாகிஸ்தான் பங்கேற்கக்கூடாது. இல்லை என்றால் ஐசிசி பாகிஸ்தானை தடை செய்யும் என்று மக்கள் கூறுகிறார்கள். தைரியம் இருந்தால் பாகிஸ்தானை தடை செய்ய முயற்சி செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்கா|தேர்தல் தோல்வியால் 170கோடி கடன்; ஜனநாயக கட்சியினருக்கு உதவி செய்யுங்கள் என ட்ரம்ப் கிண்டல்