பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இங்கு நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கான, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி துபாயில் இன்று மாலை நடக்கிறது.
உபுல் தாரங்கா தலைமையிலான இலங்கை அணியில் மலிங்கா இடம்பெறவில்லை. சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி சர்ஃப்ராஸ் அகமது கூறும்போது, டெஸ்ட் போட்டியில் தோற்றாலும் ஒரு நாள் தொடரில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர், அஸார் அலி ஆகியோர் இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை. இருந்தாலும் எங்கள் அணி வலுவாக இருக்கிறது’ என்றார்.
இலங்கை கேப்டன் உபுல் தாரங்கா கூறும்போது, ‘சாம்பியன் கோப்பையை வென்ற பலத்துடன் இருக்கிறது பாகிஸ்தான். அது சிறந்த அணி. நாங்கள் கடந்த சில தொடர்களைத் தோற்றிருக்கிறோம். இந்த தொடரில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’ என்றார்.
இரு அணிகளும் இதுவரை 148 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. 85 போட்டிகளில் பாகிஸ்தானும், 58 -ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. நான்கு ஆட்டங்களில் முடிவு இல்லை.