பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரரான கேரி கிறிஸ்டன். 56 வயதான இவர், 2011ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தவர்.
முன்னதாக, அவர் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டால் அந்த அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்த அணியுடன் பயணிக்க ஆரம்பித்தார். பொறுப்பேற்ற நாள் அவர், முதல் பாகிஸ்தான் அணியிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் உள்கட்டமைப்பிலும் மாற்றங்களை செய்ய விரும்பினார். பாகிஸ்தான் அணியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பல்வேறு குழப்பங்கள் மற்றும் விரிசல்கள் இருந்து வருகிறது.
இதுகுறித்து, கிறிஸ்டன் நேரிடையாகவே விமர்சித்தார். இதனால் அவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டிற்கு ஏழாம்பொருத்தமாக உள்ளது. தற்போது, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டபோதும், கிறிஸ்டனின் தலையீடும் எதுவுமில்லை எனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணி அடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அணித் தேர்விலும் கேரி கிர்ஸ்டன் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், கிர்ஸ்டனுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே விரிசல் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்டில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததை அடுத்து, ஆக்கிப் ஜாவேத், அலீம் தார், அசார் அலி, ஆசாத் ஷபிக் மற்றும் ஹசன் சீமா ஆகியோர் தேர்வுக் குழுவில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கேரி கிறிஸ்டனின் ராஜினாமா ஏற்கப்பட்டிருப்பதாகவும், அவருக்குப் பதில் அவ்வணியின் டெஸ்ட் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பியே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குச் செல்வார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.