விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அந்நாட்டு வீரர்களுக்கு எச்சரிக்கை..!

பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அந்நாட்டு வீரர்களுக்கு எச்சரிக்கை..!

Rasus

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது, அந்நாட்டு சகவீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மான்செஸ்டரில் (Manchester) கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை டக்வொர்த் லூயிஸ் விதிபடி 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இதுவரை நடந்த உலகக் கோப்பை தொடகளில் தொடர்ச்சியாக 7-வது முறையாக பாகிஸ்தானை இந்திய அணி தோற்கடித்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி பாகிஸ்தானுடன் தோல்வியையே சந்தித்ததில்லை என்ற சாதனையை தக்க வைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானின் தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும்  தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் கடுமையாக வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவும் (sarfraz ahmed) சக வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையில், நாம் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளோம் என்றும் மீதமுள்ள போட்டிகளில் நாம் இவ்வாறு விளையாடினால் கண்டிப்பாக பாகிஸ்தான் மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் “ யாராவது நான் மட்டுமே நாடு திரும்ப போகிறேன் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். அனைவருமே நாடு திரும்ப போகிறோம் என்பதை மனதில் வைத்து, மோசமான விளையாட்டை விடுத்து விழிப்புடன் விளையாட ஆரம்பியுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதுவரை பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை லாட்ஸ் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மட்டுமல்லாமல் இனி வரும் போட்டிகளில் பாகிஸ்தான் அணி நல்ல ரன் ரேட்டுடன் வென்றால் மட்டுமே உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.