விளையாட்டு

இனவெறி பேச்சு: விரைவில் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனுக்கு விளையாடத் தடை ?

இனவெறி பேச்சு: விரைவில் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனுக்கு விளையாடத் தடை ?

webteam

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரை இனவெறி அடிப்படையில் திட்டியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ப்ராஸ் அகமது மன்னிப்பு கேட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று விதமான போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகிறது.

முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. இந்நிலையில் 2வது ஒரு நாள் போட்டி டர்பன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றின் பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் வான்டர் டஸ்சென் மற்றும் பெஹ்லுகுவாயோ இணை தொடர்ந்து ஆட்டமிழக்காமல் ஆடி வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக செயல்பட்ட சர்ப்ராஸ் அகமது “ஹே கருப்பு நண்பரே.  இன்று உன்னுடைய தாய் எங்கு அமர்ந்து இருக்கிறார்? உனக்கு இன்று என்ன கூறுவதற்காக அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறாய்? என பேசியுள்ளார்.

அவரின் இந்த பேச்சு ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாகி உள்ளது.  சர்ப்ராஸ் அகமதுவின் இந்த இனவெறி பேச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சர்ப்ராஸின் இத்தகையை பேச்சுகளை ஆதரிக்கப்போவதில்லை எனவும் கிரிக்கெட் சபை கூறியுள்ளது. சர்ப்ராஸின் செயல்பாடுகள் மீது போட்டி அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டால் ஐ.சி.சி.யால் சர்ப்ராஸ் விளையாட தடை விதிக்கக்கூடிய நிலை ஏற்படும்.

இதனிடையே சர்ப்ராஸின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரை இனவெறி அடிப்படையில் திட்டியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ப்ராஸ் அகமது மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், “ நடந்த நிகழ்வுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரையும் குறிப்பிட்டு நான் அவ்வாறு பேசவில்லை.

யாருக்கும் கேட்க வேண்டும் என்று கூட நான் பேசவில்லை. துருதிஷ்டவசமாக என் பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இனி இதுப்பொன்று தவறுகள் நடக்காது” என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே டிவி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து தவறாக பேசிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா மற்றும் ராகுலுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.