2022 டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதிற்கேற்ப பல சுவாரசியங்களை கடந்து இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது, இந்த 2022ஆம் ஆண்டின் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பைத் தொடர். அரையிறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இன்று தொடங்கிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இங்கிலாந்து கிரிக்கெட்டின் “ஹாட் ஃபாதர்” என்றழைக்கப்பட்ட ”டேவிட் இங்கிலிஸ்” மறைவிற்கு கருப்பு ரிப்பனை கைகளில் அணிந்தபடி களமிறங்கினர் இங்கிலாந்து அணியினர்.
பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஓபனர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினாலும், 5ஆவது ஓவர் வீச வந்த சாம் கரன் முகமது ரிஸ்வானை பவுல்டாக்கி பெவிலியன் திருப்பினார். பின்னர் வந்த முகமது ஹரிஸும் அவுட்டாகி வெளியேற, கைக்கோர்த்த பாபர் அசாம் மற்றும் ஷான் மசூத் இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்திருந்த பாகிஸ்தான் அணியை, 12ஆவது ஓவர் வீச வந்த சுழற்பந்துவீச்சாளர் அடில் ரசீத் கேப்டன் பாபர் அசாம் விக்கெட்டை எடுத்து மெயிடன் ஓவராக வீசி பாகிஸ்தான் அணியை அழுத்தத்திற்குள் தள்ளினார். பின்னர் வந்த இப்திகார் டக் அவுட்டாகி வெளியேற, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாகிஸ்தான் அணி தடுமாறியது.
பின்னர் நம்பிக்கை அளித்த சான் மசூத்தை சாம் கரன் வீழ்த்த, அடுத்தடுத்து வந்த வீரர்கள் அவுட்டாகி வெளியேற 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அபாரமாக பந்துவீசிய சாம் கரன் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்க இருக்கிறது இங்கிலாந்து அணி. நல்ல பவுலிங் யூனிட்டை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணி போராட போகிறதா இல்லை இங்கிலாந்து அணி எளிதாக வெல்லப்போகிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.