22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் அணி ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு நேற்றிரவு வந்து சேர்ந்தது.
பாகிஸ்தான் தடகள சம்மேளன தலைவர் அக்ரம் சாய், இந்தியாவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறியதுடன், இந்திய தடகள சம்மேளனம் செய்துள்ள ஏற்பாடுகளுக்கு பாராட்டும் தெரிவித்தார். ஒடிசாவில் நடைபெறும் தடகளப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக 6 வீரர்கள் வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். நாளை முதல் 9ம் தேதி வரை நடைபெறவுள்ள தடகள போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது. 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த 800-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 42 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுவோர் ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.