பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 26 ரன்களில் வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியை பல சுவாரசியங்களுடன் இறுதிவரை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியை சர்ச்சையுடன் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றி 22 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, பாகிஸ்தானின் அறிமுக வீரரான அப்ரார் அகமது சுழற்பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 281 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி பாபர் அசாம மற்றும் ஷாத் ஷகீல் இருவரின் அபாரமான பேட்டிங்கால் நல்ல நிலையில் இருந்தாலும், இங்கிலாந்து அணி இரண்டாவது பாதியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 202 ரன்களில் பாகிஸ்தானை சுருட்டியது. 79 ரன்களை முன்னிலையில் வைத்திருந்த இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் டக்கெட்டின் சிறப்பான ஆட்டம் மற்றும் ஹாரி ப்ரூக்கின் அதிரடியான சதத்தால் 275 ரன்கள் சேர்த்தது.
பாபர் அசாம் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி!
இந்நிலையில் 355 ரன்கள் இலக்கை துரத்த இரண்டாவது இன்னிங்ஸை துரத்தியது பாகிஸ்தான் அணி. ஓபனர்கள் அப்துல்லா மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். நன்றாக சென்ற பாகிஸ்தானின் ஆட்டத்தை திருப்பினார் ஜேம்ஸ் ஆண்டர்சன், முகமது ரிஸ்வானை 30 ரன்களில் வெளியேற்ற 66 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான், பின்னர் களமிறங்கிய பாபர் அசாமை 1 ரன்னில் பவுல்ட்டாக்கி வெளியேற்றினார் ராபின்சன். தொடர்ந்து சீரான இடைவெளியில் மூன்றாவது விக்கெட்டையும் இழந்தது பாகிஸ்தான்.
100 ரன்கள் பார்டனர்ஷிப் போட்ட ஷகீல்-இமாம்!
பின்னர் கைக்கோர்த்த ஷாத் ஷகீல் மற்றும் இமாம் உல்-ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்கள் பார்டனர்ஷிப் போட, இந்த ஜோடியை 191 ரன்களில் இமாம் விக்கெட்டை கைப்பற்றி பிரித்தார் ஜேக் லீச். பின்னர் களமிறங்கிய அஸ்ரஃப் வெளியேற, ஷகீல் உடன் கைக்கோர்த்த முகமது நவாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 290 ரன்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஸ்டிராங்கான நிலையில் இருந்தது பாகிஸ்தான்.
பாகிஸ்தானிடமிருந்து வெற்றியை பறித்த மார்க் உட்!
பாகிஸ்தான் அணியே வெற்றிபெரும் என்ற நிலையே இருந்தது. ஆனால் அதை மாற்றும் முயற்சியில் பந்துவீசிய உட், 45 ரன்களுக்கு முகம்து நிவாஸை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் அடுத்த ஓவரில் 94 ரன்களில் சதத்தை நோக்கி விளையாடிகொண்டிருந்த ஷாத் ஷகீல் விக்கெட்டை கைப்பற்றி பாகிஸ்தான் அணிக்கு இடியை இறக்கினார். பின்னர் என்ன தான் சல்மான் போராடினாலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் அவுட்டாக 328க்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி.
சர்ச்சையை கிளப்பிய ஷாத் ஷகீல் விக்கெட்!
96 ரன்களில் விளையாடிக்கொண்டிருந்த ஷாத் ஷகீல் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் வெற்றியை தேடித்தருவார் என்று எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. 94 ஓவரில் 3ஆவது பந்தை மார்க் உட் ஒயிடாக வீச அதை லெக்சைடில் தட்டி விடுவார் ஷகீல். அந்த பந்தை கேட்ச் பிடித்து விக்கெட் கீப்பர் ஒல்லி போப் வெளியேற்ற அதற்கு 3ஆவது அம்பயருக்கு செல்வார் ஆன்-அம்பயர். ஆனால் அவரது கால்-ஆக அவுட் சிக்னல் கொடுப்பார் மெய்ன் அம்பயர். மூன்றாவது அம்பயரின் பார்வைக்கு விக்கெட் ரீப்ளே செல்ல, அதை பார்த்த அவருக்கே குழப்பான ஒன்றாக அது அமைந்தது. ஆனால் பார்க்கும் எல்லோருக்கும் பந்து தரையில் பட்டது போலதான் தெரிந்தது. அதிக நேரம் எடுத்துக்கொண்ட 3ஆவது அம்பயர் அவுட் சிக்னலை கொடுப்பார்.
ஷாத் ஷகீல் விக்கெட் தான் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் இருந்தது. அந்த விக்கெட் சர்ச்சைக்குறிய வகையில் போனது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை கவலையடையச்செய்தது. சமூக வலைதளத்தில் அவர்களது ஆதங்கத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர் பாகிஸ்தான் ரசிகர்கள்.
22 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து சாதனை!
2010ஆம் ஆண்டு 1-0 என வென்ற இங்கிலாந்து அணி, 22 வருடங்கள் கழித்து மீண்டும் பாகிஸ்தானின் சொந்த மண்ணில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
63 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானின் மோசமான சாதனை!
இதுவரை பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட தொடரை இழந்ததே கிடையாது. மேலும், சொந்த மண்ணின் ஒரு டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்ததே கிடையாது. 63 வருடங்கள் கழித்து இந்த மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது பாகிஸ்தான் அணி.
ஸ்டோக்ஸ்க்கு கைக்கொடுக்க மறுத்த பாகிஸ்தான் வீரர்!
அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிபெற்ற பிறகு 11ஆவது வீரராக களமிறங்கிய முகமது அலியிடம் கைக்குலுக்க செல்வார் ஸ்டோக்ஸ். ஆனால் அவருக்கு கைக்கொடுக்காமல் நிராகரித்துவிடுவார் அலி.