பாரிஸ் ஒலிம்பிக் pt web
விளையாட்டு

தண்ணீர் மீது நடக்க இருக்கும் தொடக்கவிழா... பாரீஸ் ஒலிம்பிக்ஸின் சுவாரஸ்யங்கள்!

PT WEB

விளையாட்டு போட்டிகளின் மிகப் பெரிய திருவிழாவான ஒலிம்பிக் தொடர் இன்று தொடங்க உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுகிறது. வழக்கமாக நிலப்பகுதியில் நடக்கும் ஒலிம்பிக் தொடக்க விழாவை வித்தியாசப்படுத்த விரும்பிய பிரான்ஸ் நாடு, இந்த ஆண்டு இவ்விழாவை செய்ன் நதி மீது நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

பாரீசில் இன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்திய பிரான்ஸ், தற்போது நூறாவது ஆண்டிலும் போட்டியை நடத்துவதால், பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அருகில் உள்ள செய்ன் நதிக்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் ஆகியோர் செய்ன் நதியில், 162 படகுகள் மூலம் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் அழைத்து வரப்பட உள்ளனர்.

Austerlitz bridge பகுதியில் தொடங்கி Trocadero வரை வீரர்கள் பயணம் செய்வார்கள். Trocadéro-வில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், தங்கள் நாட்டு கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்த உள்ளனர். கண்கவர் கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி விளக்கு, பாரம்பரிய நடனங்கள் என 4 மணி நேரம் தொடக்கவிழா அரங்கேறும்.

நதிக்கரையில் 63 பிரமாண்ட எல்இடி திரைகளில் தொடக்க விழா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் நடைபெறும் போட்டியில், மொத்தம் 10,500 வீரர், வீராங்கனைகள் மோதுகின்றனர். 100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரான்ஸ், 1900 மற்றும் 1924ஆம் ஆண்டுகளுக்கு பிறகு 3வது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது.

ஆண்கள் 5,250 பேர் களமிறங்கும் நிலையில், அவர்களுக்கு சரிக்கு சமமாக பெண் போட்டியாளர்களும் 5,250 பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது, பாரிஸ் ஒலிம்பிக்-கிற்கு மற்றுமொரு சிறப்பாகி உள்ளது.