Ons Jabeur Twitter
விளையாட்டு

கடந்த ஆண்டு தோல்விக்கு பழி தீர்த்த ஆன்ஸ் ஜபியர்! நடப்பு சாம்பியன் எலினா காலியிறுதியில் தோல்வி!

விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலியிறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆன்ஸ் ஜபியர் நடப்பு சாம்பியனான எலினா ரைபாகினாவை வெளியேற்றி அசத்தினார்.

Rishan Vengai

இங்கிலாந்தில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. தங்களது கனவுகளுக்காக விளையாடிவரும் வீரர்கள் தற்போது காலியிறுதியை எட்டியுள்ள நிலையில், நாக் அவுட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அந்தவகையில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப்போட்டியானது சென்டர் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது.

Elena Rybakina vs Ons Jabeur

அந்த போட்டியில் நடப்பு கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த எலினா ரைபாகினா, துனிசியா நாட்டைச் சேர்ந்த ஆன்ஸ் ஜபியரை எதிர்கொண்டு விளையாடினார். கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ஸ் ஜபியரை இறுதிப்போட்டியில் வீழ்த்தி தான் தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் எலினா. இந்நிலையில் மீண்டும் அதே போலான வெற்றியை எலினா கொண்டுவரப்போகிறாரா, இல்லை கடந்த முறை அடைந்த தோல்விக்கு ஆன்ஸ் பழிதீர்க்க போகிறாரா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகவே இருந்தது.

நீயா நானா என கடைசிவரை த்ரில்லராக சென்ற போட்டி!

இரண்டு வீராங்கனைகளும் வெற்றிக்காக உயிரை கொடுத்து விளையாடினர். முதல் செட் 6-6 என டை பிரேக்கராகவே நெடுநேரம் சென்றது. பின்னும், என்னதான் எலினா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் செட்டை 7-6 என வென்றாலும், ‘இது என் காலம்’ என வெறித்தனமாக இறங்கி ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த இரண்டு செட்களை 6-4, 6-1 என கைப்பற்றி அசத்தினார் ஆன்ஸ்.

ஒவ்வொரு பாய்ண்டையும் எலினா போராடியே பெற வேண்டியது இருந்தது. அந்தளவு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆன்ஸ் ஜபியர். கடந்த முறை பைனலில் தோல்வியடைந்ததாலோ என்னவோ இந்தமுறை ஆன்ஸிற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாகவே இருந்தது.

பழிக்கு பழி தீர்த்த ஆன்ஸ் ஜபியர்!

கடந்த 2022ஆம் ஆண்டு விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் எலினா ரைபாகினாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார் ஆன்ஸ் ஜபியர். கடந்த பைனலில் முதல் செட்டை 6-3 என ஆன்ஸ் கைப்பற்றினாலும், அடுத்தடுத்த இரண்டு சுற்றுகளில் கம்பேக் கொடுத்த எலினா 6-2, 6-2 என ஆன்ஸை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச்சென்றார்.

தற்போது அதே அடியை எலினாவிற்கு திருப்பி கொடுத்திருக்கும் ஆன்ஸ், முதல் செட்டை இழந்த போதிலும் அடுத்தடுத்த இரண்டு சுற்றுகளில் கம்பேக் கொடுத்து, நடம்பு சாம்பியனை தொடரிலிருந்தே வெளியேற்றியுள்ளார்.

அடுத்தபடியாக இறுதிப்போட்டிக்கு செல்வதற்காக அரையிறுதிப்போட்டியில் பெலாரஷியாவின் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்காவை எதிர்த்து விளையாடுகிறார் ஆன்ஸ் ஜபியர். போட்டியானது வரும் சனிக்கிழமையன்று இங்கிலாந்து கிளப்பில் நடைபெற உள்ளது.