விளையாட்டு

சச்சின் டெண்டுல்கரும் சில இமாலய சாதனைகளும்!

சச்சின் டெண்டுல்கரும் சில இமாலய சாதனைகளும்!

jagadeesh

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 48 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை அவரது ரசிகர்கள் வாழ்த்துகளுடன் அவரின் தலைச் சிறந்த இன்னிங்ஸ்களை நினைவுக் கூறுவார்கள். உலக கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக சச்சின் நிகழ்த்திய சாதனைகள் அபாரமானது. அந்தச் சாதனைகளை முறியடிக்க இப்போதுள்ள சமகால சிறந்த வீரர்களான விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் முன்னோக்கி வருகின்றனர்.

ஆனாலும் சச்சினின் சாதனைகள் முறியடிப்பதோ எட்டிப்பிடிப்பதோ முடியாத காரியம் இல்லையென்றாலும், அதனை நெருங்கி தொடுவதும் பிடிப்பதும் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதுபோலதான் இருக்கும். கடந்த ஆண்டு சச்சின் Vs கோலி என்ற பேச்சு சமூக வலைத்தளத்தில் எழுந்தபோது, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அது அப்போது பலரையும் ஆச்சரியப்படுத்தியது இல்லாமல் உண்மையாகவும் இருந்தது.

அது "சச்சின் குவித்துள்ள ரன்களை வைத்து பார்த்தால், இப்போது கோலி தனது 8 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் வேகத்தையொட்டி பார்த்தால். சச்சினின் ரன்களை அவர் முறியடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது அவ்வளவு எளிதான விஷயமா என்ன? நாம் இங்கு கடவுளை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். கடவுளை காட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.

சச்சினின் சாதனை சில துளிகள்!

இந்தியாவுக்காக அதிகபட்சமாக 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். அதேபோல 24 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றவர். உலகளவிலும் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் சச்சின் மட்டுமே.

டெஸ்ட் போட்டிகளில் 15921 ரன்களை குவித்து அசைக்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரர். இவருக்கு அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் 13,378 ரன்களுடன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார்.

அதிகமுறை உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் சச்சின் முதல் இடத்தில் இருக்கிறார். இதுவரை 12 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் 6 உலகக் கோப்பையில் பங்கேற்றார் சச்சின். அது 1992, 1996, 1999, 2003, 2007, மற்றும் 2011.

அதேபோல உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மொத்தம் 2,278 ரன்களை விளாசியுள்ளார். இது உலகில் வேறு எந்த பேட்ஸ்மேனும் நெருங்க முடியாத சாதனையாக இன்றளவும் இருந்து வருகிறது.

ஒருநாள் அதிக சதங்கள் (49), அதிக தடவை 50+ ரன்கள் (145) எடுத்தவர் சச்சின். 1998-ல் 9 சதங்கள் எடுத்தார் சச்சின். ஒரு வருடத்தில் அதிக சதங்கள் எடுத்த வீரரும் சச்சின் தான்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 18,426 ரன்களும் எடுத்துள்ளார் சச்சின். இந்த சாதனயை நெருங்குவதற்கு பலருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் சச்சின்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6,707 ரன்கள் எடுத்துள்ளார் சச்சின். வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இன்னொரு நாட்டுக்கு எதிராக இவ்வளவு ரன்கள் எடுத்ததில்லை. ஒரு நாட்டுக்கு எதிராக அதிக சதங்கள் எடுத்தவர், சச்சின். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள் எடுத்துள்ளார்.