சூதாட்டப் புகாரில் சிக்கிய ஓமன் நாட்டு கிரிக்கெட் வீரருக்கு 7 ஆண்டுக்கால தடையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
ஓமன் கிரிக்கெட் அணியைச் சேர்ந்தவர் யூசுப் அப்துல்ரஹீம் அல் பலூஷி. இவர் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியின் போது, சக வீரரை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க முயற்சித்ததாக ஐசிசி ஊழல் பிரிவில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில் தன் மீதான புகாரை அல் பலூஷி ஏற்றுக்கொண்டார்.
இவர் மீது சூதாட்ட விவகாரம் குறித்து ஐசிசியிடம் தெரிவிக்காதது, 4 பிரிவுகளில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. சூதாட்ட தரகர் ஒருவர் யூசுஃப் அல் பலூஷியுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவரின் தூண்டுதலின் பேரில் பலூஷி, சக நாட்டு வீரரை கடந்த ஆண்டு ஆகஸ்டில் சூதாட்டத்தில் ஈடுபட வைக்க முயன்றதாகவும் பலூஷி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறும்போது "இது மிகவும் மோசமான நடவடிக்கை. தனது சகநாட்டு வீரரை சூதாட்டத்தில் ஈடுபட வைப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம். ஆனாலும் அல் பலூஷி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் அதனால்தான் அவருக்கு 7 ஆண்டுக்காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.