அன்டிம் பங்கால் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்தாரா அன்டிம் பங்காலின் சகோதரி? உண்மையில் நடந்தது என்ன?

“எனது அடையாள அட்டையை பயன்படுத்தி ஒலிம்பிக் கிராமத்திற்குள், என்னுடைய சகோதரி நுழைய முயலவில்லை. பரவும் தகவலில் உண்மையில்லை. அது முற்றிலும் வதந்தி” என அன்டிம் பங்கால் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Prakash J

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவில், பதக்கங்களை வேட்டையாடி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்தியில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களும் சில சர்ச்சைக்கு இடமளிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில் மல்யுத்தத்தில் மகளிருக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பாக அண்டிம் பங்கால் களமிறங்கினார். இதில் துருக்கி வீராங்கனையிடம் தோல்வியைத் தழுவினார். என்றாலும், தோல்வியடைந்தவர்கள் மற்ற வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் அவர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், அன்டிம் பங்கால் மற்றும் அவரது குழுவினர் பாரிஸில் இருந்து உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், குறிப்பாக அவருடைய சகோதரி நிஷா பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதாவது, அன்டிம் பங்காலின் அடையாள அட்டையை பயன்படுத்தி ஒலிம்பிக் கிராமத்திற்குள், அவருடைய சகோதரி நுழைய முயன்றதாகவும், அதன்பேரிலேயே அன்டிம் பங்காலின் குழுவினர் உடனேயே நாடு கடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், “இதில் எதுவும் உண்மையில்லை. இது முற்றிலும் வதந்தி” என அன்டிம் பங்கால் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அந்த வீடியோவில், “அந்தப் போட்டியில் நான் தோற்றதால், என் சகோதரி காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகி வருகிறது. அது தவறு. நான் அந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவிய பிறகு, எனக்கு காய்ச்சல் வந்தது. அந்த நேரத்தில், என்னை அங்குள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்ல என் சகோதரி விரும்பினார். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருடன் செல்ல எனது பயிற்சியாளர்களிடம் அனுமதி பெற்றேன்.

அவர்கள் அனுமதி கொடுத்த பிறகு, நான் ஹோட்டலுக்கு வந்தேன். அந்த சமயத்தில் ஒலிம்பிக் கிராமத்தில், நான் வைத்திருந்த பொருட்களில் சில எனக்கு தேவைப்பட்டன. எனக்கு உடல்நிலை சரியில்லாததால், அந்தப் பொருட்களை எடுக்க என் சகோதரி எனது அங்கீகார அட்டையை எடுத்துக் கொண்டு ஒலிம்பிக் கிராமத்திற்குச் சென்றார். அப்போதுதான் அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்த உண்மையை அவர்கள் புரிந்துகொண்ட பின்பு, என் சகோதரியை விடுவித்தனர். அதுபோல், என் பயிற்சியாளர் வாகன ஓட்டுநர் ஒருவரிடம் சண்டையிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதிலும் உண்மையில்லை.

நான் அடைந்த தோல்வியால் அவர்களும் மிகவும் வருத்தப்பட்டனர். நான்தான் அவர்கள் ஹோட்டல் வருவதற்கான வண்டியை முன்பதிவு செய்தேன். மொழி பிரச்னை காரணமாக அவர்கள், ஓட்டுநரிடம் சிறிது சிக்கலில் மாட்டிக்கொண்டனர். மேலும் பணம் பெறுவதற்காக பயிற்சியாளர்கள் எனது அறைக்கு வந்தனர். அந்த ஹோட்டலில் எனது அறை மேல் மாடியில் இருந்ததால் சிறிது நேரம் பிடித்தது. இதனால் ஓட்டுநருக்கு தாமதமானது. இதன்காரணமாகவே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனால், பெரிதாக எதுவும் நடைபெறவில்லை. அடுத்து, நான் தோற்றவுடனேயே ஒலிம்பிக் கூட்டமைப்பிடம் இந்தியாவுக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்யச் சொன்னேன். அவர்களும் அதன்பேரிலேயே விமான முன்பதிவைச் செய்திருந்தனர். ஆனால், என்னுடைய அடையாள அட்டையை பயன்படுத்தி ஒலிம்பிக் கிராமத்திற்குள், என் சகோதரி நுழைய முயன்றதாகவும், அதன்பேரிலேயே என் குழுவினர் உடனேயே நாடு கடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானதில் உண்மையில்லை. இதுபோன்ற வதந்திகளை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.