பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார். அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆடவர் மல்யுத்தத்தில் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அமன் ஷெராவத், பியூர்டோ ரிகோ வீரர் டாரியன் க்ரூசை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் ஷெராவத், 13-5து என்ற புள்ளிக்கணக்கில் டாரியன் க்ரூசை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதன்மூலம் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றிய 21 வயதே ஆன அமன் ஷெராவத், நடப்பு ஒலிம்பிக்ஸ் தொடரில் மல்யுத்தத்தில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அத்துடன் அறிமுக ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வென்ற பெருமையையும் அமன் பெற்றுள்ளார். ஏற்கெனவே 5 பதக்கங்களை இந்தியா வென்றிருந்த நிலையில், தற்போது 5 வெண்கலம், ஒரு வெள்ளி என 6 பதக்கங்களை பெற்றுள்ளது.
வெற்றி குறித்து பேசிய அமன் ஷெராவத், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்தியாவிற்காக பதக்கம் வென்றதை தன்னால் நம்ப முடியவில்லை எனவும் கூறினார். மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற ஷெராவத்திற்கு குடியரசுத் தலைவர் திரளபதி முர்மு, குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் சிங் தன்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அமன் ஷெராவத் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹரியானாவில் உள்ள அவரது சொந்த ஊரில் குடும்பத்தினர், நண்பர்கள் இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.