இமானே கெலிஃப் புதிய தலைமுறை
ஒலிம்பிக்ஸ்

சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃப்- தங்கம் வென்று சாதனை!

பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரியா குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை யாங்க் லியூசை வீழ்த்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரியா குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை யாங்க் லியூசை வீழ்த்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.

இந்தவகையில், மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப். இவருக்கும் சீன வீராங்கனை யாங்க் லியூசைக்கும் இடையே வெள்ளிக்கிழமையன்று, இறுதிப்போட்டி நடைபெற்றது.

தொடக்கத்தில் இருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கெலிஃப், 5-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் சீன வீராங்கனை யாங்க் லியூசை அபாரமாக வீழ்த்தி தனது வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் தங்கப் பதக்கம் வென்று அல்ஜீரியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

அப்போது அரங்கில் இருந்தவர்கள் அல்ஜீரிய கொடிகளை ஏந்தி, கெலிஃபின் பெயரை முழக்கமிட்டனர். போட்டியின் இறுதியில் தனது வெற்றி குறித்து இமானே கெலிஃப் தெரிவிக்கையில்,“ நான் ஒரு பெண்ணாகவே பிறந்து பெண்ணாகவே வாழ்ந்து வருபவள். இந்த வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது என் கனவு. எனது வெற்றியை எதிராளிகளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை ” என்று தெரிவித்திருப்பது, தனது பாலினம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனைவருக்கும் பதிலடிக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

தங்களின் நாட்டிற்கு பெருமை சேர்ந்த இமானேவிற்கு அந்நாட்டு மக்கள் தங்களின் அன்பையும், வாழ்த்துகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு 16-வது சுற்றில் பங்கேற்ற இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, அல்ஜீரியா நாட்டின் வீராங்கனை இமானே கெலிஃபுக்கு எதிராக மோதினார். ஆனால், 46 நொடிகளில் மூக்குடைந்த நிலையில் போட்டியிலிருந்து விலகினார் ஏஞ்சலா கரினி. இதனையடுத்து, இமானே கெலிஃப் குறித்து பாலினம் சார்ந்த சர்ச்சைக்குரிய வகையில் வாதங்கள் முன்னிருத்தப்பட்டன.

மேலும், கடந்த 2023 உலக சாம்பியன்ஷிப்பில் பாலின தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்பட்டார். அந்த சோதனையில் கெலிஃப் தோல்வியடைந்ததால் அவரை உலக சாம்பியன்ஷிப் ஸ்போர்ட்ஸ் கமிட்டி தகுதிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியை பொறுத்தவரை, காலிறுதிப்போட்டியில் ஹங்கேரியின் லூகா அன்னா ஹமோரியை எதிர்கொண்டார் கெலிஃப். இந்தப் போட்டியில் 5க்கு பூஜ்யம் என்ற புள்ளிக் கணக்கில் இமானே கெலிஃப் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், ஒலிம்பிக் பதக்கத்தை அவர் உறுதி செய்தார்.

தற்போது இறுதிப்போட்டியில் பங்கேற்று சீன வீராங்கனை யாங்க் லியூசை வீழ்த்தி தங்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.