எலான் மஸ்க், இமானே, ரெளலிங் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

இமானே கெலிஃப் பாலினம் குறித்த கருத்து| எலான் மஸ்க், ட்ரம்ப் பெயர்கள் வழக்கில் சேர்ப்பு!

Prakash J

பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் சீனா வீராங்கனை யாங் லியூவை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே கெலிஃப் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

முன்னதாக, 2-வது சுற்றில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, இமானே கெலிப்பின் குத்துகளை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 வினாடிகளில் அழுதபடி போட்டியில் இருந்து விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, இமானே கெலிஃப்பின் பாலினம் குறித்த சர்ச்சை சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பதிவிடப்பட்டன. இந்த விஷயத்தில், ஒலிம்பிக் கமிட்டியும் அவருக்கு ஆதரவாக இருந்தது.

இறுதியில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். அதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காத இமானே பின்னர், தங்கப் பதக்கம் வென்றபிறகு தன் பாலினம் குறித்து பேசியிருந்தார். தொடர்ந்து தன் பாலினரீதியாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களை சட்டரீதியாக தண்டிக்க வலியுறுத்தி பிரான்ஸில் இமானே புகார் அளித்துள்ளார்.

மேலும் தனது வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வமான போராட்டத்தை அவர் முன்னெடுத்துள்ளார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர், ”இமானே மீது இனவெறியுடன் பாலினரீதியான அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதே தங்கள் நோக்கம்” என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ஒலிம்பிக்கில் தோல்வி| பேட்மிண்டன் வீரரை விமர்சித்த பயிற்சியாளர்.. ஆதரவு தெரிவித்த சுனில் கவாஸ்கர்!

அந்த வகையில், இமானே கெலிஃப்பின் பாலினம் குறித்து கருத்து பதிவிட்டவர்களில் உலக பணக்காரர்களில் ஒருவரும் எக்ஸ் தளத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், அமெரிக்க நீச்சல் வீராங்கனை ரிலே கெய்ன்ஸ், எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோரது பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, அமெரிக்க நீச்சல் வீராங்கனை ரிலே கெய்ன்ஸ் இமானே கெலிஃப்பின் பாலினம் குறித்து சர்ச்சைக்குரிய பதிவிட்டிருந்தார். அவருடைய பதிவில், "ஆண்கள் பெண்கள் விளையாட்டுகளில் #IStandWithAngelaCarini சார்ந்தவர்கள் அல்ல” எனப் பதிவிட்டிருந்தார். இதைப் பகிர்ந்த எலான் மஸ்க், “கண்டிப்பாக” எனப் பதில் அளித்திருந்தார். அதுபோல் எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங்கும், இமானேவை ஓர் ஆண் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் டொனால்டு ட்ரம்பும், ”பெண்கள் விளையாட்டுகளில் இருந்து ஆண்களை ஒதுக்கி வைப்பேன்" என்று கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் இமானே கெலிஃப்பை மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்பேரிலேயே தற்போது அவர்களது பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம் குறித்த செய்தி| முற்றுப்புள்ளி வைத்த மனுபாக்கரின் தந்தை!