வினேஷ் போகத் web
ஒலிம்பிக்ஸ்

எதனால் வினேஷ் போகத் தகுதி நீக்கம்? உலக மல்யுத்த விதிகள் சொல்வது என்ன? யார் இதற்கு பொறுப்பு?

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த பிரிவில் 50கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த வினேஷ் போகத் கூடுதலாக எடையிருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Rishan Vengai

124 வருட இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு மல்யுத்த வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறை என்ற இமாலய சாதனையை படைத்த வினேஷ் போகத், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சர்வதேச அளவில் ஒருமுறைகூட தோல்வியே சந்திக்காத நம்பர் 1 வீராங்கனை ஜப்பானின் யூ சுசாகியை கடைசி 15 வினாடியில் வீழ்த்தி வரலாறு படைத்தார்.

அதேபோல காலிறுதி சுற்றில் 3 முறை காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை மற்றும் அரையிறுதிசுற்றில் பான் அமெரிக்கன் கேம்ஸ் 2023-ல் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்தார்.

உலக நம்பர் 1 வீராங்கனையையே வீழ்த்திவிட்டார் எப்படியும் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துவிடும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இந்தியர்கள் காத்திருந்தனர். ஆனால் எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் வினேஷ் போகத் கூடுதலாக எடையிருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

எடை குறைப்பு என்ற மிகப்பெரிய போரை எதிர்கொண்ட வினேஷ் போகத்.. 

வினேஷ் போகத் கடந்த ஏழு மாதங்களாக தொடர்ந்து எடை குறைப்பு என்ற மிகப்பெரிய போரை எதிர்கொண்டார். அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டுவந்த அவர், பிப்ரவரியில் தேசிய போட்டிகளில் பங்கேற்க 60 கிலோவிலிருந்து தன்னை 55 கிலோவுக்கு குறைத்துக்கொள்ளும் மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொண்டார்.

ஆனால் 53 கிலோ எடைப்பிரிவில் வேறொரு வீராங்கனை தகுதிபெற்றதால், 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொள்ள முடிவுசெய்து ஒலிம்பிக் சோதனைகளில் பங்கேற்க 50 கிலோவாக தன்னைக்குறைத்து கொண்டார். கடந்து 5 வருடங்களாக அவருடைய சாதாரண எடை பிரிவு என்பது 53கிலோவாக இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

உடல் மற்றும் மனரீதியாக மிகப்பெரிய போரை எதிர்கொண்ட வினேஷ் போகத், இப்படியான முறையில் வெளியேறியிருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.

உலக மல்யுத்த விதிகள் சொல்வது என்ன?

* ஒலிம்பிக் மல்யுத்தத்தில் போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளும், காலை வேளையில் உடல் எடை பரிசோதனை நடைபெறும்.

* முந்தைய நாளில் மருத்துவ பரிசோதனைக்கு செல்லாத வீரர்கள், உடல் எடை பரிசோதனையில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

*சிங்லெட் என்ற மல்யுத்த உடையில் தான் உடற்பரிசோதனையில் பங்கேற்க வேண்டும். வீரர்கள் எந்த நோய்த்தொற்றும் இன்றி, முழு உடற்தகுதியோடு இருப்பதை உறுதிசெய்யப்படுவார்கள்.

*உடல் எடை பரிசோதனையில் பங்கேற்கும் வீரர்கள், அவர்கள் விருப்பத்தின்படி எத்தனை முறை வேண்டுமானாலும் உடல் எடையை பார்த்துக் கொள்ளலாம்..

*ரெபிசேஜ் சுற்று மற்றும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 2வது நாளிலும் உடல் எடைப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

*ஒரு வீரர் எந்த பிரிவில் பங்கேற்கிறாரோ, அந்த பிரிவிற்கான எடை இருப்பதை நடுவர் உறுதி செய்வார்.

*நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகமாக இருந்தால் அந்த வீரர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

*தகுதிநீக்கம் செய்யப்பட்ட வீரருக்கு பதக்கம் வழங்கப்படாது. அவர் தரவரிசையிலும் கடைசி இடத்திற்கு தள்ளப்படுவார்.

வினேஷ் போகத்

*வினேஷ் போகத் நேற்று நடைபெற்ற சோதனையில் சரியான எடையில் இருந்த நிலையில், இன்று நடைபெற்ற சோதனையில் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

* வினேஷ் போகத்தின் தகுதிநீக்கத்தை எதிர்த்து இந்தியாவுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

யார் இதற்கு பொறுப்பு?

வினேஷ் போகத் நேற்று ஒரே நாளில் 3 போட்டிகளில் விளையாட வேண்டிருந்ததால், அவருக்கு எனர்ஜி அளிக்க எலக்ட்ரோலைட் போன்ற பானங்கள் வழங்கப்பட்டிருக்கலாம். அதனால் அவரது எடை கூடியிருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஆனால் யாருக்கு இந்த எடை அதிகரிப்புக்கு பொறுப்பு அதிகம் என்ற கேள்வி வரும்போது, பயிற்சியாளர் மற்றும் ஊழியர்களுக்கும் அதிகம் இருந்தாலும், வீரருக்கும் அதிக பொறுப்பு இருக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வினேஷ் போகத்

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தடகள வீரர்களை நிர்வகித்த ஒரு தேசிய பயிற்சியாளர் கூறுகையில், ”பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் தான் இதற்கான பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அரையிறுதிப்போட்டிக்கு பிறகு வினேஷ் போகத்தை தனியாக விடக்கூடாது” என்று கூறினார்.

அதேநேரத்தில் சர்வதேச மகளிர் மல்யுத்த வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மற்றொரு தேசிய பயிற்சியாளர் கூறுகையில், "பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. வீரர்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இது இந்தியாவிற்கு பெரிய இழப்பு" என்று கூறியுள்ளார்.

இதுஎல்லாவற்றையும் மீறி உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் தலைமுடியை வெட்டி, ஜாக்கிங் முதலிய பல முயற்சிகளில் வினேஷ் போகத் முயற்சிசெய்து 2 கிலோ வரை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 100 கிராம் எடையில் தங்கப்பதக்க கனவு தகர்ந்தது மிகப்பெரிய இடியாக அனைவருக்கும் இறங்கியுள்ளது.