'வினேஷ் நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன். இந்தியாவின் பெருமை. ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் உந்துசக்தி. இன்றைய பின்னடைவு வேதனை தருகிறது.
நான் அனுபவிக்கும் உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை. அதே சமயத்தில் தளராத மன உறுதிக்கு நீங்கள் உதாரணம். சவால்களை எதிர்கொண்டு வெல்வது உங்கள் இயல்பு. மீண்டும் வாருங்கள் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’
- இது நம் நாட்டின் பிரதமர் வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதிச் சுற்றில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின் சொன்ன வார்த்தைகள். இதற்கு பதிலளிக்கும் விதமாக,
“வினேஷ் தகுதி நீக்கப் செய்யப்பட்ட பின்பு
ட்வீட் போடுவது,
பி.டி. உஷாவிடம் கூறி எதிர்ப்பு தெரிவிக்க சொன்னது
என ‘தீவிரமாக’ செயல்பட்ட பிரதமரால், வினேஷ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போது ஏன் எந்த வாழ்த்தும் சொல்ல முடியவில்லை?” என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியுள்ளார். பஞ்சாப் முதல்வர் ஏன் இப்படி சொன்னார் என்பதில் இருந்துதான், அரசியல் தொடங்குகிறது.
இந்தியாவிற்காக உலக மேடையில் கர்ஜிக்கும் வினேஷ் போகத்திற்கு இந்த பாஜக அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்பதை சற்றே திரும்பிப் பார்த்தால் மல்யுத்த வீரர்களை கைது செய்தது, மிரட்டல் விடுத்தது, என கொஞ்ச நஞ்சமல்ல அத்தனை 'சாதனை'களை (?) அரசின் மீது சொல்லிக் கொண்டே போகலாம்.
காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவர் உட்பட பல பெண் மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சியாளர்களால் பல ஆண்டுகளாக தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக கூறி கடந்த ஜனவரி 2023ம் ஆண்டில் போராத்தில் இறங்கினர். அப்போது அவருடன் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட பல மல்யுத்த வீரர்களும் போராட்டதில் இறங்கினர்.
போராட்டத்தில் ஈடுபடும் முன், வினேஷ் போகத் அளித்த பேட்டியில், "10-20 பெண் மல்யுத்த வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய தகவல்கள் எனக்குத் தெரியும். இதில் பல பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களும் அடங்குவர். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். அதுவரை எந்தவொரு தடகள விளையாட்டு வீரரும் எந்த நிகழ்விலும் பங்கேற்க மாட்டார்கள். பயிற்சியாளர்கள் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர், மேலும் கூட்டமைப்பிற்கு பிடித்த சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடந்து கொள்கின்றனர். சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பிரிஜ்பூஷண் சரண் சிங்கும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை கொடுத்துள்ளார். அவர்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு எங்களை தொந்தரவு செய்கிறார்கள். எங்களை சுரண்டுகிறார்கள். நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றபோது, எங்களோடு பி.சி.யோ அல்லது பயிற்சியாளரோ இல்லை. இதற்கு எதிராக குரல் கொடுத்து வருவதற்காக தொடர்ந்து நாங்கள் மிரட்டப்பட்டு வருகிறோம்" என்று அதிகாரத்தை எதிர்த்து துணிச்சலாக பேசியிருந்தார். இதன்பின், ஜந்தர் மந்தர் தெருக்களில் இறங்கி போராடத் துவங்கினார்.
18 வயதுக்கு கீழ் உள்ள பெண் உட்பட பல பெண் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி மாதக்கணக்கில் போராட்டதில் ஈடுபட்டனர் மல்யுத்த வீரங்கனைகள். ஆனால் பாஜக அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பாஜக எம்.பி. மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள், அவர்களது ஆதரவாளர்கள் மீது ‘கலவரம் மற்றும் அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்தல்’ ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இது மட்டுமல்லாது உலக அரங்கில் நாட்டிற்காக விளையாடிப் பெறுமை சேர்த்துள்ள வீரர்கள் என்னும் எண்ணம் துளியும் இல்லாமல்... கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வது, அவர்கள் மீது தடியடி நடத்துவது, குண்டுக்கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்துவது போன்ற செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர் காவல் துறையினர்.
இன்னொருபக்கம், குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷண் சிங்கோ வீராங்கனைகளுக்கு எதிராகப் பேசிக்கொண்டு எம்.பி யாகத் தொடர்ந்துகொண்டிருந்தார். காவல்துறையினர் வீரர் வீராங்கனைகளிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டனர். ஆளுங்கட்சியின் முக்கியப்புள்ளி பிரிஜ் பூஷண் என்பதால் அக்கட்சியின் ஐடி-விங் தரப்பிலும் வீராங்கனைகளுக்கு எதிராக ஒரு கூட்டமே அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தது.
எதற்கும் சளைத்திடாத அவர்கள், போராட்டத்தின் அடுத்தகட்டமாக புதிய நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகச் சென்றும், தாங்கள் வாங்கிய பதக்கங்களைக் கங்கையில் வீசுவதாகவும் அறிவித்தனர். ஆனாலும்கூட அரசாங்கத்தினர் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. என்னதான் பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களுக்கு உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய இந்தியச் சட்டம் கட்டாயப்படுத்தினாலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகுதான் இவ்வழக்கில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆரே பதிவு செய்யப்பட்டது.
பாஜக அரசாங்கத்தினர் புகாரை வாபஸ் வாங்கக் கூறியும் போராட்டத்தைக் கைவிடக் கூறியும் வினேஷ் போகத் உள்ளிட்ட போராட்டக்காரர்களை மிரட்டியும் உள்ளனர். ஆனால், இத்தனை போராட்டங்களுக்கும் கண்ணீருக்கும் பிறகும் நாட்டின் மிகப் பெரிய விளையாட்டு வீராங்கனையை இழக்கும் தருவாயில்கூட ‘நாரி சக்தி’ என்று பெண்களை மேடைக்கு மேடை வாய் வார்த்தைகளில் போற்றிக் கொண்டாடும் பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. போரட்டக்காரர்களைச் சந்திக்கவும் இல்லை.
‘அதுசரி, மணிப்பூர் பக்கமே செல்லாத மோடி இவர்களுக்கு மட்டும் எப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்?’ என எதிர்க்கட்சிகள்தான் பேசின!
'எங்களை கொன்றுவிட வேண்டுமென்றால் கூட கொன்றுவிடுங்கள். நாங்கள் குற்றவாளிகள் இல்லை . இத்தனை பாடுபட்டு இந்த நாட்டுக்காக பதக்கங்களை வென்று கொடுத்தது இதற்காகத்தானா?'
- ஜந்தர் மந்தரின் தெருக்களில் கிடந்து மாதக்கணக்கில் நீதிக்காக போராடிய நம் நாட்டு வீரமங்கையின் வலி தாங்கிய வார்த்தைகள் இவை.
இவற்றைக் கேட்டும் கூட பாஜக தலைவர்கள் ஒரு வார்த்தை பேசவில்லை. இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பெண் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற வீரர்களின் கதறல்களை காற்றில் பறக்க விட்டுவிட்டு பிரிஜ் பூஷனின் நெருங்கிய நண்பரான சஞ்சை சிங்தான் தலைவராக நியமிக்கப்பட்டார். அதைவிட ஒரு படி மேலே சென்று பிரிஜ் பூஷன் சரன் சிங்கின் மகனுக்கு எம்.பி சீட் வழ்ங்கி அதிகாரத்தின் கோரத்தனத்தைக் காட்டியது பாஜக.
இப்படியொரு சூழலில்தான் ஒலிம்பிக்ஸ் களத்திற்குள் வந்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக்ஸ் களம் ஒன்றும் அவருக்கு புதிதல்ல. ஏற்கனவே இரண்டு முறை ஆடியிருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வினேஷூக்கும் அசோசியேஷனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களே அவரின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது. தற்போது பாரிஸ் ஒலிம்பிக்ஸிலும் அரசியல் சிக்கல்கள் ஏற்படும் என எக்கச்சக்க பயத்தோடும் சவால்களோடும்தான் களம் இறங்கினார்.
ஆனாலும், “நான் எனது நாட்டின் எதிர்கால மல்யுத்த வீராங்கனைகளுக்காக சண்டையிடுகிறேன். எனக்காக அல்ல. என் மல்யுத்த வாழ்வு முடிந்து விட்டது. இதுவே எனது கடைசி ஒலிம்பிக்ஸ். நாளை நம் நாட்டில் இருந்து வரும் இளம் வீராங்கனைகள் பாதுகாப்பாக விளையாடுவதற்காக நான் சண்டை இடுகிறேன்.
அதனால்தான் சென்ற ஆண்டு சந்தர மந்திரியில் இருந்தேன் இப்போது இங்கு இருக்கிறேன். நான் ஒலிம்பிக்கில் பதக்கம் என்று அந்த பதக்கத்தை பிரிட்ஜ் போஷன் சரண் சிங்கின கண்களை நேருக்கு நேர் பார்த்து அந்த மடலை காட்டுவேன். தீவிரமாக பயிற்சி செய்தால் என்னால் வெல்ல முடியும். யாராலும் என்னை தடுக்க முடியாது” என கர்ஜித்துக் கொண்டே மன உறுதியோடு ஒலிம்பிக்ஸில் களம் கண்டு இறுதிச் சுற்றிற்கும் முன்னேறிய வினேஷ் மல்லுக்கட்டியது வீராங்கனைகளோடு மட்டுமல்ல... இத்தனை ஆண்டும் அவரது குரல்வளையை நெறித்துக் கொண்டிருந்த அதிகார சுரண்டல்களோடும்தான். தங்கள் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளோடும்தான் அவர் போராடினார்.
வினேஷின் வெற்றி பிரிஜ் பூஷன் சிங்கின் முகத்தில் விழுந்த அறை என நாடே கொண்டாடிக்கொண்டிருந்த சமயத்தில் வந்து விழுந்தது அடுத்த இடி. 100 கிராம் இடை அதிகமாக இருந்த காரணத்தால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது அவரது போராட்டத்திற்கு விழுந்த அடுத்த அடியாகவே இருந்தாலும் நாட்டில் பல்வேறு தரப்பினர் அதற்கான கண்டனக் குரல்களையும் எழுப்பி வருகின்றனர்.
கவலை வேண்டாம் வினேஷ்... நீங்கள் இந்த இரண்டாண்டுகளில் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் ஒரு விளையாட்டு வீராங்கனையும் ஒரு அரசியல் புரட்சி நாயகியும் இந்நாட்டில் உதித்துக்கொண்டிருப்பாள்.
அரசு உங்களோடு நிற்காத நேரத்திலும் நாடு முழுக்க இத்தனை கரங்களை உங்களைத் தாங்கியது போல அத்தனை குரல்கள் உங்களுக்காக ஒலித்தது போல இப்போதும் உங்களுக்காக இந்நாட்டு மக்கள் இருக்கிறோம்.
பதக்கம் வென்றாலும் இல்லையென்றாலும் இந்தியா கண்டெடுத்த மிகப்பெரிய பதக்கம் நீங்கள். கலங்காதே கலைமகளே!