india olympics winners 2024 web
ஒலிம்பிக்ஸ்

மனு பாக்கர் To அமன் ஷெராவத்... அரசாங்க வேலையுடன் ரொக்க பரிசு! யார் யாருக்கு என்னென்ன?

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்களுடன் முடித்தது, இது கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கை விட ஒன்று குறைவாக இருந்தது. இருப்பினும் வினேஷ் போகத் பதக்கத்தை பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்துவருகிறது.

Rishan Vengai

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இந்தியாவிலிருந்து பாரீஸ் சென்ற 117 பேர் கொண்ட குழு 69 பதக்கப்போட்டிகளில் பங்கெடுத்து விளையாடியது. தங்களின் திறமையை வெவ்வேறு போட்டிகளில் வெளிப்படுத்திய இந்திய வீரர்கள், ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களுடன் ஒலிம்பிக்கை நிறைவு செய்தனர். இறுதிவரை பதக்கத்திற்கு போராடிய 8 வீரர்கள் 4வது இடத்தில் முடித்தனர், ஒருவேளை அவர்களும் பதக்கம் வென்றிருந்தால் பதக்க எண்ணிக்கை 15ஆக இருந்திருக்கும். அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியா தங்களுடைய ஒலிம்பிக் எண்ணிக்கையை உயர்த்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

manu bhaker

இந்தியாவின் பதக்கப்பட்டியலை பொறுத்தவரையில்,

  • துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் உடன் சரப்ஜோத் சிங் இணைந்து 2 வெண்கலங்களும்,

  • துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே ஒரு வெண்கலம்,

  • இந்திய ஹாக்கி அணி ஒரு வெண்கலம்,

  • ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம்

  • மல்யுத்தம் 57கிலோ எடைப்பிரிவில் அமன் ஷெராவத் வெண்கலம்

என இந்தியா 6 பதக்கங்களை வென்று அசத்தியது.

இந்நிலையில் பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரருக்கும் பரிசு அறிவிக்கப்பட்டது. யாருக்கு என்ன ரிவார்டு கிடைத்தது என்பதை பார்க்கலாம்..

மனு பாக்கர் (துப்பாக்கி சுடுதல்)

சுதந்திர இந்தியாவில் இருந்து ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் தடகள வீராங்கனை என்ற வரலாற்றை எழுதினார் மனு பாக்கர். அவருக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ரூ.30 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்தார்.

மனு பாக்கர்

இந்தியாவின் வெற்றி மங்கையாக வலம்வந்த 22 வயதான மனுபாக்கர், பாரிஸ் ஒலிம்பிக் 2024 நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்தியவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

சரப்ஜோத் சிங் (துப்பாக்கி சுடுதல்)

சரப்ஜோத் சிங் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு போட்டியில் மனு பாக்கருடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். அம்பாலாவைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ரூ.22.5 லட்சம் பரிசாக அறிவித்தார்.

மனு பாக்கர், சரப்ஜோத்

அவருக்கு மேலும் மரியாதை அளிக்கும் விதமாக ஹரியானா அரசாங்கத்தால் வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டது, ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்து தொடர்ந்து துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்த முடிவு செய்தார்.

ஸ்வப்னில் குசலே (துப்பாக்கி சுடுதல்)

Swapnil Kusale

ஸ்வப்னில் குசலே, ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் போட்டியில் வெண்கலம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவரது வெற்றியைத் தொடர்ந்து, ஸ்வப்னில் மத்திய ரயில்வேயால் சிறப்புப் பணியில் நியமிக்கப்பட்டார். மேலும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் இருந்து ரூ.1 கோடி பரிசு அறிவிப்பை பெற்றுள்ளார்.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஒலிம்பிக்கில் தொடர்ந்து தங்களுடைய இரண்டாவது வெண்கலப் பதக்கத்தை வென்றது. நிறைவு விழாவில் கொடி ஏந்தியவர்களில் ஒருவராக இருந்த கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் தன்னுடைய விளையாட்டிலிருந்து பிரியாவிடை கொடுத்தார்.

ஸ்ரீஜேஷ்

பரிசை பொறுத்தவரையில்,

  • இந்தியா ஹாக்கி அணியில் இருந்த ஒவ்வொரு வீரருக்கும் ரூ.15 லட்சமும், துணைப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.7.5 லட்சமும் ரொக்கப் பரிசாக அறிவித்துள்ளது.

  • டிஃபண்டர் அமித் ரோஹிதாஸுக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சி ரூ.4 கோடி பரிசு அறிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.15 லட்சமும், துணைப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும் பரிசாக அறிவித்தார்.

  • பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து அணி வீரர்களுக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். அதில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் அதிக கோல் அடித்த கேப்டன் ஹர்மாப்ரீத் சிங்கும் அடங்குவர்.

நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்)

2024 பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கம் வென்றதால், நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். நீரஜின் ரொக்கப் பரிசுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவர் பல்வேறு விருதுகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீரஜ் சோப்ரா

2021 ஆம் ஆண்டு, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றபோது, ​​ஹரியானா அரசால் அவருக்கு ரூ.6 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

அமன் செஹ்ராவத் (மல்யுத்தம்)

அமன் ஷெராவத்

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 57 கிலோ மல்யுத்த ​​போட்டியில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் இளம்வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் பெறும் ரொக்கப் பரிசுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

வினேஷ் போகத் (மல்யுத்தம்)

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த பிரிவில் 50கிலோ எடைப்பிரிவில் உலகத்தின் நம்பர் 1 வீராங்கனையான சுசாகியை வீழ்த்தி இறுதிப்போட்டிவரை முன்னேறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட 50கிலோ எடையை விட 100கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

தகுதிநீக்கத்தால் அவருக்கு பதக்கம் மறுக்கப்பட்ட நிலையில், வெள்ளிப்பதக்கம் வேண்டி சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாளை தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

வினேஷ் போகத்

ஹரியானா வீராங்கனையான வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும், அவருக்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான வரவேற்பும், பரிசுத்தொகையும் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சரான நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.