வினேஷ் போகத் ட்விட்டர்
ஒலிம்பிக்ஸ்

”வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என அஞ்சினேன்”- எடைகுறைப்பு குறித்து பயிற்சியாளர் பகிர்ந்த ஷாக் தகவல்!

வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என்று தாம் அஞ்சியதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வினேஷ் போகத்தின் மனுவை எடுத்துக்கொண்ட சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம், மனுமீதான தீர்ப்பினை ஒலிம்பிக் முடிவதற்குள் (ஆகஸ்ட் 11) அளிப்பதாக கூறி தள்ளிவைத்தது.

பின்னர் ஆகஸ்ட் 11ஆம் தேதி, அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “ஆகஸ்ட் 13ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும்” என இரண்டாவது முறையாக தள்ளிவைத்தது. பின் ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்த தீர்ப்பு விசாரணைக்கு வந்தபோது ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மூன்றாவது முறையாக ஒத்திவைத்தது.

இந்த நிலையில், வினேஷ் போகத்தின் வெள்ளிப்பதக்கம் உறுதியாகிவிடும் என எதிர்ப்பார்த்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 14) வினேஷ் போகத்தின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில், வினேஷ் போகத் இறந்து விடுவாரோ என்று தாம் அஞ்சியதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: “அலோபதியால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பு” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாபா ராம்தேவ்!

இதுகுறித்து வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் வோலர் அகோஸ், “அரையிறுதிப் போட்டி முடிந்ததும், வினேஷ் கூடுதலாக 2.7 கிலோ எடை இருந்தார். உடனடியாக 1 மணிநேரம் 20 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டார். ஆனால், 1.5 கிலோ கூடுதலாகவே இருந்தது. பிறகு 50 நிமிடங்கள் கடும் உடற்பயிற்சி செய்தும், அவரது உடலிலிருந்து ஒரு சொட்டு வியர்வையும் வரவில்லை. நாங்கள் அப்போது எந்த ஒரு வாய்ப்பையும் விடுவதாக இல்லை. நள்ளிரவு முதல் காலை 5.30 மணி வரை பல்வேறு உடற்பயிற்சிக் கருவிகளை அவர் மேற்கொண்டார். ஒவ்வொரு மணி நேரமும் வெறும் 2-3 நிமி இடைவெளிகள் மட்டும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருந்தார்.

ஒருநிமிட இடைவெளிக்குப் பிறகு உடனே பயிற்சியை தொடங்குவார். ஒருமுறை அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் விழுந்துவிட்டார். ஆனால், மீண்டும் எழுந்து உடற்பயிற்சியைத் தொடங்கினார். ஒருமணி நேரம் கடுமையான வெப்பம் நிறைந்த தண்ணீரில் இருந்தார். அவரது கடுமையான உடற்பயிற்சிகளை பற்றி இங்கே என்னால் விரிவாக விளக்க முடியவில்லை. ஆனால், இப்போது ஒன்றுமட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. அவர் கடும் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது, வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என்று நான் அஞ்சினேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: இளம் வயதில் திருமண வாழ்க்கை!! பாகிஸ்தானில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள்.. காரணம் இதுதான்!