வினேஷ் போகத், குஸ்மான் லோபஸ் pt web
ஒலிம்பிக்ஸ்

வினேஷ் போகத் தகுதியிழப்பு.. இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையுடன் மோதப்போவது யார்?

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இறுதிப் போட்டியில் கியூபாவின் குஸ்மான் லோபஸ் அமெரிக்க வீராங்கனையுடன் மோதுகிறார்.

Angeshwar G

50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, இந்தியர்களின் இதயங்களை நொறுங்கச் செய்திருக்கிறது.

வினேஷ் போகத்

நேற்று நடைபெற்ற சோதனையில் சரியான எடையில் இருந்த நிலையில், இன்று நடைபெற்ற சோதனையில் அவர் 150 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வினேஷ் போகத் நேற்று ஒரே நாளில் 3 போட்டிகளில் விளையாட வேண்டிருந்தது. அதனால் அவருக்கு எனர்ஜி அளிக்க எலக்ட்ரோலைட் போன்ற பானங்கள் வழங்கப்பட்டிருக்கலாம்.. அதனால், அவரது எடை கூடியிருக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். வினேஷ் போகத்தின் தகுதிநீக்கத்தை எதிர்த்து இந்தியாவுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிப் போட்டியில் யார்?

இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், கியூபாவின் குஸ்மான் லோபஸ் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார். மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில், அரையிறுதிப் போட்டியில், வினேஷ் போகத்திடம் குஸ்மான் லோபஸ் தோல்வி அடைந்தார். அவர் அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்ட் பிராண்ட்டுடன் இறுதிப் போட்டியில் மோத இருக்கிறார்.

வினேஷ் போகத்திற்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது மிகவும் துரதிர்ஷ்டமானது மற்றும் நியாயமற்றது. அதிகாரிகள் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, தக்க பதிலளிப்பார்கள் என நம்புகிறேன். ஏனெனில் இது ஆரம்ப சுற்றுப் போட்டி அல்ல. உண்மையில் இதற்கு நாம் மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.