வினேஷ் போகத் புதிய தலைமுறை
ஒலிம்பிக்ஸ்

”இனி என்னிடம் போராட சக்தி இல்லை.. ”- ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

100 கிராம் கூடுதல் எடை இருப்பதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ’இனி என்னிடம் போராட சக்தி இல்லை..’ என்று பதிவிட்டு மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

100 கிராம் கூடுதல் எடை இருப்பதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ’இனி என்னிடம் போராட சக்தி இல்லை..’ என்று பதிவிட்டு மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, இந்தியர்களின் இதயங்களை நொறுங்கச் செய்திருக்கிறது.

2024 ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சர்வதேச அளவில் ஒருமுறைகூட தோல்வியே சந்திக்காத நம்பர் 1 வீராங்கனை ஜப்பானின் யூ சுசாகியை கடைசி 15 வினாடியில் வீழ்த்தி வரலாறு படைத்தார்.

அதேபோல காலிறுதி சுற்றில் 3 முறை காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை மற்றும் அரையிறுதி சுற்றில் பான் அமெரிக்கன் கேம்ஸ் 2023-ல் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்தார்.

இப்படி, பல நாடுகளின் முன்னிலை வீராங்கனைகளை வீழ்த்தி அடுத்தடுத்து வெற்றி கண்டார். இதனால் ஒலிம்பிக்கில் அவருக்கு பதக்கம் உறுதியானது.

இந்நிலையில் அரையிறுதிப்போட்டி முடிவடைந்த தினம் இரவு முதலே, தோராயமாக வினேஷ்க்கு 2 கிலோ எடை அதிகரித்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே, இரவு முழுவதும் தூங்காமல், ஜாகிங், ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல் என அனைத்து பயிற்சிகளையும் செய்துள்ளார்.

இதனையடுத்து, இறுதிப்போட்டியில் பங்கேற்க போட்டி துவங்குவதற்கு முன்பு வழக்கம்போல உடல் எடை சோதனை செய்யப்பட்டது. அப்போது, தேவையான எடையை விட 100 கிராம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, வினேஷ் போட்டியிலிருது தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், ‘நீங்கள் போட்டியில் தங்கம் வெற்றிப்பெறாமல் சென்றிருக்கலாம். ஆனால், மக்களின் இதயங்களை வென்று விட்டீர்கள்’ என்று வினேஷ் போகத்திற்கு மக்கள் தங்களின் ஆதரவுகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.

மேலும், இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் கமிட்டி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும், வினேஷ்க்கான வாய்ப்புகள் முடிந்து விட்டதாக சர்வதேச மல்யுத்த சங்கம் அறிவித்து விட்டது.

இந்நிலையில், இன்று காலை முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார், வினேஷ் போகத்.

தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவிப்பு வெளிட்டுள்ள அவர், ”அம்மா, மல்யுத்த போட்டியில் நான் வெற்றி பெற்றேன், இருந்தாலும் நான் தோற்றேன். என்னை மன்னித்துவிடு. உங்கள் கனவு, என் தைரியம், அனைத்தும் உடைந்துவிட்டன, இனி என்னிடம் போராட சக்தி இல்லை.. குட்பை மல்யுத்தம் 2001-2024 ... உங்கள் அனைவருக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன், மன்னிக்கவும்..." என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு, வினேஷ் போகத்தின் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை, இந்திய மக்கள் அனைவருக்கும் பேரிடியாக விழுந்துள்ளது.