உகாண்டா ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனையான 33 வயது ரெபேக்கா செப்டேஜி (Rebecca Cheptegei) இறந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் வியாழன் அன்று உறுதிப்படுத்தியுள்ளனர், அவர் தனது காதலனால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டபந்தயத்தில் 44ஆவது இடத்தைப் பிடித்த வீராங்கனை, கென்யாவை சேர்ந்த ரெபேக்கா செப்டேஜி (வயது 33). இவர் டிக்சன் எண்டிமா என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பாக நிலம் ஒன்றை வாங்கிய விவகாரத்தில், ரெபேக்காவிற்கும் அவரது காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்னை அதிகரித்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி ரெபேக்காவின் காதலன் அவர்மீது பெட்ரோல் ஊற்றி கொலைசெய்ய முயற்சித்துள்ளார். இதனால், ரெபேக்காவிற்கு 75% தீக்காயங்கள் ஏற்பட்டது. உடன் காதலன் டிக்சனுக்கும் காயம் ஏற்படவே இருவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் உகாண்டாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மருத்துவமனையில் ரெபேக்கா சிகிச்சை பலனின்றி இறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
கென்யாவில் இதுப்போன்று பெண் வீராங்கனைகள் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. 2021-லிருந்து இதுவரை 4 கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அக்டோபர் 2021-ல், கென்ய ஒலிம்பியன் ஆக்னஸ் டிரோப் பல கத்திக் காயங்களுக்கு உள்ளான நிலையில், அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர் அவருடைய கணவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டு கென்யாவில் பிறந்த பஹ்ரைன் தடகள வீராங்கனையான டமரிஸ் முத்தி என்பர் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
அதேபோல 2023-ம் ஆண்டு உகாண்டா ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரான பெஞ்சமிக் கிப்லாகாட் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்தார்.
இந்நிலையில் ரெபேக்காவின் மரணம் கென்யாவில் பெண் விளையாட்டு வீரர்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சினையை எடுத்துக்காட்டுகிறது.
ரெபேக்காவின் மரணம் குறித்து உகாண்டா ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் டொனால்ட் ருகாரே, X பக்கத்தில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார், அதில் அவர், "எங்கள் ஒலிம்பிக் தடகள வீராங்கனை Rebecca Cheptegei ... அவளது காதலனின் கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து இறந்ததை நாங்கள் அறிந்தோம். அவள் மென்மையாக இருக்கட்டும். ஆன்மா சாந்தியடையட்டும், பெண்களுக்கு எதிரான வன்முறையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், இது ஒரு சிறந்த விளையாட்டு வீரரை இழக்க வழிவகுத்த ஒரு கோழைத்தனமான மற்றும் முட்டாள்தனமான செயல்” என்று சாடியிருந்தார்.
அதேபோல உகாண்டாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் பீட்டர் ஓக்வாங், செப்டேஜியின் மரணம் "துயர்கரமானது" என்று விவரித்தார், மேலும் கென்ய அதிகாரிகள் வழக்கை விசாரித்து வருவதாகக் குறிப்பிட்டார். விரிவான அறிக்கை உரிய நேரத்தில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.