வினேஷ் போகத் புதிய தலைமுறை
ஒலிம்பிக்ஸ்

வெள்ளி பதக்கம் கிடைக்குமா?வினேஷ் போகத் வழக்கில் இன்று தீர்ப்பு

வெள்ளி பதக்கம் வழங்க வலியுறுத்தி வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கில் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளிக்கிறது.

PT WEB

வெள்ளி பதக்கம் வழங்க வலியுறுத்தி வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கில் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளிக்கிறது.

ஒலிம்பிக் மல்யுத்தம் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்தியாவின் வினேஷ் போகத் கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோவை விட 100 கிராம் அதிமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவருக்கு பதக்க வாய்ப்பு பறிபோனது.

இறுதிப் போட்டி வரை முன்னேறியதால் வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத், மனுத்தாக்கல் செய்தார்.

இது தொடர்பான விசாரணை தொடங்கியபோது அவர் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். முதல் நாளில் வினேஷ் போகத் எடை சரியாக இருந்தது என்றும், மறுநாள் எடை கூடியது விதிகளை மீறியது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து தெரிவித்துள்ள அவர், ”கூடுதலாக இருந்த 100 கிராம் எடையின் காரணமாக வினேஷ் போகத்துக்கு போட்டியில் சாதகமான சூழல் அமைந்துவிடாது. கோடைகால வெப்பத்தின் காரணமாக கூடுதல் தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியம்.

எல்லாவற்றுக்கும் மேல் வீராங்கனையின் உடல்நலம் முக்கியம்.” எனக் குறிப்பிட்ட மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, ஒலிம்பிக் கிராமம்- மல்யுத்தம் நடைபெறும் மைதானம் இடையேயான தூரம் மற்றும் குறைவான நேர இடைவேளியுடன் கூடிய போட்டி அட்டவணை ஆகியவை முக்கிய காரணங்கள் என்றும் வாதங்களை முன்வைத்தார்.

இதையடுத்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.