Norman Pritchard web
ஒலிம்பிக்ஸ்

IND Olympics: இந்தியாவுக்கா? பிரிட்டிஷ்க்கா? முதல் பதக்கத்தில் எழுந்த சர்ச்சை! யார் அந்த PRITCHARD?

Rishan Vengai

இந்தியாவின் ஒலிம்பிக் வரலாற்றில் 37 பதக்கங்கள் பட்டியலில் முதலிரண்டு பதக்கங்களை வென்ற பெருமை இந்தியாவின் முதல் தடகள வீரர் நார்மன் பிரிட்சார்ட்டுக்கே சேரும். 1900-ல் பங்கேற்ற ஒரே ஒலிம்பிக் தொடரிலேயே 2 பதக்கங்களை வென்ற இவர், இன்றுவரை ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரராக நிலைத்து நிற்கிறார்.

நார்மன் பிரிட்சார்ட்டின் இந்த 124 வருட சாதனையைதான் தற்போது துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், 2024 ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்று சமன் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சுதந்திர இந்தியாவுக்கு பிறகு ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

மனு பாக்கர்

ஆனால் இதற்கெல்லாம் பிள்ளையார் சுழிபோட்டு இந்தியாவின் ஒலிம்பிக் கனவுகளுக்கு உயிர்கொடுத்தவர் என்றால் அது நார்மன் பிரிட்சார்ட், கொல்கத்தாவில் பிறந்து இந்தியாவிற்காக 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்று கொடுத்த பிரிட்டிஷ் வம்சாவளியை சேர்ந்தவர் குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம்..

1900 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஜொலித்த நார்மன் பிரிட்சார்ட் கதை..

இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கத்திற்கான தொடக்கம் 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் தொடங்கியது. இந்தியா சார்பில் பங்கேற்ற பிரிட்டிஷ் வம்சாவளியை சேர்ந்த முதல் இந்திய தடகள வீரர் நார்மன் பிரிட்சார்ட், தன்னுடைய முதல் ஒலிம்பிக் பதிப்பில் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்று இந்தியாவின் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்குள்ளும் மிகப்பெரிய கனவை விதைத்தார்.

1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 200 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்ற பிரிட்சார்ட், 1875ம் ஆண்டு ஏப்ரல் 23-ல் கல்கத்தாவில் பிறந்தார். பிரிட்டிஷ் தம்பதிக்கு பிறந்த அவர், கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

நார்மன் பிரிட்சார்ட்

ஒரு இயற்கை விளையாட்டு வீரராக திகழ்ந்த அவர், தடகள ஓட்டம் மற்றும் கால்பந்து இரண்டிலும் அதீத திறமையுடன் விளங்கினார். 1884 முதல் 1900 வரை ஏழு ஆண்டுகள் பெங்கால் 100 கெஜம் ஓட்டத்தை வென்று சாதனை படைத்தார். அதுமட்டுமில்லாமல் 1897-ல் கால்பந்து போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்தும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.

1900-ம் ஆண்டு தன்னுடைய 25 வயதில் இங்கிலாந்து சென்ற பிரிட்சார்ட், பிரிட்டிஷ் AAA சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று, 120 யார்ட்ஸ் தடை ஓட்டத்தில் ரன்னர்-அப்பாக மாறி எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளினார். அங்கு போட்ட விதைதான் அவருக்கு ஒலிம்பிக் அணியில் இடம் கிடைக்க வழிவகை செய்தது.

நார்மன் பிரிட்சார்ட்

1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற அவர்

  • 60 மீட்டர்,

  • 100 மீட்டர்,

  • 200 மீட்டர்,

  • 110 மீட்டர் தடை ஓட்டம் மற்றும்

  • 200 மீட்டர் தடைஓட்டம்

முதலிய 5 பிரிவுகளில் போட்டியிட்டார். அதில் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 200 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை இந்தியாவிற்காக வென்று சாதனை படைத்தார்.

இந்தியாவுக்கா? பிரிட்டிஷ்க்கா? எழுந்த சர்ச்சை!

இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்பதை தாண்டி, ஆசிய நாட்டிற்காக ஒலிம்பிக்கை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் வீரர் என்ற பெருமைய பெற்ற பிரிட்சார்ட்டுக்கு, 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

நார்மன் பிரிட்சார்ட் ஒலிம்பிக்கில் யாருக்காக போட்டியிட்டார் இந்தியாவுக்கா? அல்லது பிரிட்டிஷ்க்காகவா? என்ற சர்ச்சை வெடித்தது. பிரிட்டன் மற்றும் இந்தியா இரண்டும் அவரை தங்கள் பிரதிநிதி என்று கூறின.

இரு தரப்பும் உறுதியான வாதங்களை முன்வைக்கின்றன. பிரிட்சார்ட் இந்தியாவில் பிறந்தாலும் ‘சந்தேகத்திற்கு இடமின்றி அவர் பிரிட்டிஷை சேர்ந்தவர், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான திட்டம் பிரிட்சார்ட்டை AAA குழுவின் உறுப்பினராக பட்டியலிடுகிறது’ என்று பிரிட்டிஷ் ஒலிம்பிக் வரலாற்றாசிரியர் இயன் புக்கானன் கூறுகிறார். புக்கானனின் கூற்றுப்படி நியூயார்க் டைம்ஸ் பிரிட்சார்ட்டை "ஆங்கிலக்காரர்" என்று அழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Norman Pritchard

ஆனால் இந்திய ஒலிம்பிக் வரலாற்றாசிரியர் குலு எசெக்கியேல், “பிரிட்சார்ட் இந்தியாவில் பிறந்து பல தசாப்தங்களாக இங்கு வாழ்ந்தார்” என்று குறிப்பிடுகிறார். தி ஃபீல்ட் இதழின் ஒரு பகுதியில் பிரிட்சார்ட் "இந்திய சாம்பியன்" என்று குறிப்பிடப்பட்டதாக தி டெலிகிராப் செய்தி கூறுகிறது.

மற்றொரு அறிக்கையானது "இங்கிலாந்தில் நடந்த போட்டிகளில், பெங்கால் பிரசிடென்சி அத்லெடிக் கிளப் ஆஃப் இந்தியா மற்றும் லண்டன் அத்லெடிக் கிளப் ஆகிய இரண்டிலும் உறுப்பினராக அவரது பெயர் உள்ளிடப்பட்டதன் மூலம் அவர் எந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது மர்மமாகவே இருக்கிறது" என்று கூறுகிறது.

ஆனால் அப்போதைய சூழலில், ‘பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற நாடுகளில், ஒரு சில நாடுகள் மட்டுமே தங்களை தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளை பதிவு செய்தன. அவற்றில் இந்தியா அல்லது பிரிட்டன் சேர்க்கப்படவில்லை’ என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பிரிட்சார்டின் வெள்ளிப் பதக்கங்களை இந்தியாவுக்குக் குறிப்பிடுகிறது. இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த சர்ச்சைகள் எல்லாம் இருந்தபோதிலும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது (IOC) நார்மன் பிரிட்சார்ட் இந்தியாவுக்காக போட்டியிட்டதாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. நார்மன் பிரிட்சார்ட் வென்ற 2 ஒலிம்பிக் பதக்கங்களை சேர்த்து, இந்தியா இதுவரை 37 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது என்றுள்ளது.