பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து பதக்கங்களை வேட்டையாடினர்.
இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில், அவர்கள் 5 வெண்கலம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்துடன் 6 பதக்கங்களைக் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 17-வது பாராலிம்பிக் போட்டிகள், அதே பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கியது. பாராலிம்பிக் தொடரில் மாற்றுத்திறனாளிகள், நிரந்தர காயமுற்றவர்கள், உடல் உறுப்பு குறைபாடுடைய 4.400 வீரர், வீராங்கனைகள் 22 விதமான போட்டிகளில் 549 பதக்கங்களுக்காக பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் பாராலிம்பிக்கில் கலந்துகொண்டு இருக்கின்றனர். கடந்தமுறை இந்தியா 19 பதக்கங்களை வென்ற நிலையில், இந்தமுறை அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வீரர்கள் வெல்லுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்தியா இருக்கிறது.
2024 பாரீஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனைகளான துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராம்தாஸ் இருவரும் வெள்ளி மற்றும் வெண்கலத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஒரே பிரிவில் இடம்பெற்ற இரண்டு இந்திய ஸ்டார் வீரர்களான துளசிமதி மற்றும் மனிஷா இருவரும் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினர். இதில் சோகம் என்னவென்றால் அரையிறுதிப்போட்டியில் இரண்டு இந்திய வீராங்கனைகளும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராம்தாஸ் இருவருக்கும் இடையேயான பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டியில் மனிஷாவை விட அபாரமாக விளையாடிய துளசிமதி 23-12, 21-17 என்ற இரண்டு நேர்செட்களில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையை எதிர்த்து விளையாடிய துளசிமதி 21-17, 21-10 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இதன்மூலம் துளசிமதி வெள்ளிப்பதக்கமும், மனிஷா ராம்தாஸ் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தார். பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முதலிரண்டு இந்திய வீராங்கனைகள் என்ற சாதனையை தமிழக வீராங்கனைகள் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
பதக்கம் வென்றதற்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்திய வீரர்கள் 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் வென்று பதக்கங்களின் எண்ணிக்கையை 11ஆக உயர்த்தியுள்ளனர்.