2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
மற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் முக்கியமான சுற்றில் பதக்கத்தை வெல்ல முடியாமல் போராடிவரும் நிலையில், துப்பாக்கி சுடுதல் வீரர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். முதலில் துப்பாக்கி சுடுதலில் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், கலப்புப் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கான பதக்க கணக்கை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் மற்றொரு துப்பாக்கி சுடுதல் வீரரான ஸ்வப்னில் குசலே 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தி உள்ளார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் தகுதிச்சுற்று கடைசிப்போட்டியில் ஸ்வப்னில் குசலே 590-38x புள்ளிகளுடன் 7வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
அதனைத்தொடர்ந்து இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கம் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்புடன் இந்தியா காத்திருந்த நிலையில், இறுதிப்போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் பங்கேற்ற குசலே 6 சுற்றுகளில் 451.4 புள்ளிகளை எடுத்து 3வது இடம் பிடித்து வெண்கலத்தை தட்டிச்சென்றார்.
இறுதிப்போட்டியில் சீனாவின் லியு யுகுன் 463.6 புள்ளிகளுடன் தங்கமும், உக்ரைனின் செர்ஹி குலிஷ் 461.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். குசலே ஆறு சுற்றுகளில் 451.4 புள்ளிகளை எடுத்து வெண்கல பதக்கம் வென்றார்.
இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலேவுக்கு 2024 பாரிஸ் ஒலிம்பிக்தான் அறிமுக ஒலிம்பிக்காகும். தன்னுடைய அறிமுக ஒலிம்பிக்கிலேயே வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் குசலே.
அதுமட்டுமில்லாமல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவிற்காக பதக்கம் வெல்லும் முதல் வீரர் என்ற பெருமையையும் குசலே பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கடைசியாக 2012 லண்டன் ஒலிம்பிக் தொடரில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் ஜாய்தீப் கர்மாகர் 4வது இடத்தில் முடித்தார்.