பிரகாஷ் படுகோன், சுனில் கவாஸ்கர் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்கில் தோல்வி| பேட்மிண்டன் வீரரை விமர்சித்த பயிற்சியாளர்.. ஆதரவு தெரிவித்த சுனில் கவாஸ்கர்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் வீரர் லக்சயா சென் தோல்வியைத் தழுவிய நிலையில், மூத்த பயிற்சியாளர் பிரகாஷ் படுகோன் கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது அவரது கருத்துக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு அளித்துள்ளார்.

Prakash J

பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் மலேசிய வீரருக்கு எதிராக களமிறங்கியிருந்தார். கட்டாயம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லக்சயா சென் தோல்வியைத் தழுவினார்.

இதுகுறித்து இந்திய பேட்மிண்டன் பயிற்சியாளர் பிரகாஷ் படுகோன் கடுமையாகச் சாடியிருந்தார். அவர், 'அரசாங்கத்தையும் விளையாட்டு சங்கங்களையும் மட்டுமே குறை சொல்லக்கூடாது. அவர்கள் என்ன செய்ய முடியுமோ அது அத்தனையையும் செய்துவிட்டார்கள். வீரர்கள்தான் சிறப்பாக செயல்படுவதில்லை. அதிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் சொதப்புகிறார்கள். பதக்கம் வெல்வதற்கான செயல்பாடுகள் சிறப்பாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நாம் வேகம் எடுக்க வேண்டும்” என்றார்.

லக்‌ஷயா சென், பிரகாஷ் படுகோன்

தொடர்ந்து அவர், “இந்த சமயத்தில் வீரர்களும் தோல்விகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என நினைக்கிறேன். குறைந்தபட்சமாக நடப்பு ஒலிம்பிக்ஸ் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்ஸின் செயல்பாடுகளுக்காகவாது வீரர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். எங்களுக்கு இன்னும் வசதிகள் வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கக்கூடாது. அதற்கு பதில் வீரர்கள் தங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும். நாம் தேவையான அளவுக்குக் கடினமாக உழைக்கிறோமா? பதக்கம் வெல்வதில் எங்கே கோட்டைவிடுகிறோம்? என்பதைப் பற்றி வீரர்கள் தங்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டும்” எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.

இதையும் படிக்க: UWW விதிமுறைகளில் சிலஓட்டைகள்! இப்படி வாதிட்டால் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு

இதற்கு மூத்த பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா பதிலடி கொடுத்திருந்தார். அவர், ”ஒரு வீரர் வெற்றி பெற்றால், அனைவரும் அதைக் கொண்டாட களத்தில் குதிப்பார்கள். ஆனால், அந்த வீரர் தோல்வியுற்றால் அவர்மீது மட்டுமே தவறிழைக்கப்படுகிறது. ஆனால் உரிய பயிற்சியின்மைக்கும், வீரரை தயார்படுத்துவதற்கும் பயிற்சியாளர்கள் ஏன் பொறுப்பேற்பதில்லை” எனப் பதிலடி கொடுத்திருந்தார்.

சுனில் கவாஸ்கர்

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் சுனில் கவாஸ்கர், பிரகாஷ் படுகோனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், “தற்போது வீரர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து நிறைய ஆதரவு உள்ளது. தோல்விகளுக்கு வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரகாஷ் படுகோனின் கூற்றை, நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் நம் நாடு தங்கப் பதக்கங்களை வெல்லும் இடத்தில்தான் சாக்கு சொல்கிறது. எனவேதான் அவரது (பிரகாஷ் படுகோன்) கருத்துக்கு விவாதம் அதிகம் உள்ளது. ஒரு வீரர் தனது செயல்திறனுக்கு பொறுப்பேற்கப் போவதில்லை என்றால், யார் அதற்கு பொறுப்பேற்பது? பிரகாஷ் படுகோன், அப்படி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? சிலர் நேரத்தைக் குறை கூறுகிறார்கள். ஆனால் ஒரு வீரர் தோல்விக்கான காரணத்தைத் தேடுவதுதான் எப்போதும் சிறந்ததாக இருக்கிறது. அவர், உடை மாற்றும் அறையில் வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் விமர்சித்திருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, ஒரு வீரரை கடுமையாக விமர்சிப்பதைத் தவிர, எதுவும் தாக்கத்தை ஏற்படுத்தாது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மனுபாக்கர் - நீரஜ் சோப்ரா திருமணம் குறித்த செய்தி| முற்றுப்புள்ளி வைத்த மனுபாக்கரின் தந்தை!