2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை வென்று தன் கணக்கை துவங்கியுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், கலப்புப் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்காக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இரண்டு பதக்கங்களுடன் தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய பதக்க கணக்கை உயர்த்தும் வகையில் போராடி வருகிறது.
அந்தவகையில் கடந்த ஆண்டு ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசனுக்கான குழு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான ஸ்வப்னில் குசலே, நடப்பு 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு ஒலிம்பிக் பதக்கத்தை கொண்டுவரும் முனைப்பில் இறங்கியுள்ளார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் தகுதிச்சுற்று கடைசிப்போட்டியில் ஸ்வப்னில் குசலே 590-38x புள்ளிகளுடன் 7வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதனால் இந்தியாவிற்கு 3வது ஒலிம்பிக் பதக்கம் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்றைய தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டியில் பங்கேற்ற ஸ்வப்னில் குசலே, க்னீலிங் பொஷிசனில் 198 (99, 99) புள்ளிகள், ப்ரோன் மற்றும் ஸ்டேண்டிங் பொஷிசனில் 197 (98, 99) மற்றும் 195 (98, 97) புள்ளிகளும் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் 8 இடங்களுக்குள் தன் இடத்தை சீல்செய்தார். ஒட்டுமொத்த ஸ்கோரான 590 (38x) உடன் 7வது இடத்தில் முடித்த குசலே, தன்னுடைய பைனல் சுற்றில் நாளை பங்கேற்க உள்ளார். குசலே இந்தியாவிற்காக 3வது பதக்கத்தை எடுத்துவருவார் என்ற நம்பிக்கையுடன் இந்தியா காத்திருக்கிறது.
மற்றொரு இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரான ஐஸ்வரி தோமர் 589 புள்ளிகளுடன் 11வது இடத்தில் முடித்து வெளியேறினார்.