கிரிக்கெட்டை அதிகமாக கொண்டாடும் இந்திய நாட்டில் கடந்த 2023-ம் வருடம் புதிய உலகசாதனையை படைத்து ஒட்டுமொத்த பேட்மிண்டன் உலகத்தையும் திரும்பிபார்க்க வைத்தது இந்தியாவின் சாத்விக்-சிராக் பேட்மிண்டன் இணை.
இந்திய பேட்மிண்டன் இணையனரான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இருவரும் கடந்த 2023ம் ஆண்டு உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் இரட்டையர் பிரிவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர். இந்த சாதனையை படைக்கும் முதல் இந்திய இரட்டையர் என்ற பெருமையையும் பெற்றனர்.
"அழிவின் சகோதரர்கள் (Brothers of Destruction)" என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்த இந்திய ஜோடி, பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இரண்டிலும் பேட்மிண்டன் விளையாட்டில் நாட்டிற்காக முதல் தங்கப் பதக்கத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று வரலாறு படைத்தது.
மேலும் “2023 சுவிஸ் ஓபன் பேட்மிண்டன், 2023 இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்” இரண்டிலும் சாம்பியன்சிப் பட்டம் வென்ற இவர்கள், இதை முதல்முறையாக வென்ற இந்தியாவின் முதல் ஆண்கள் இரட்டையர் என்ற பெருமையை பெற்றனர். அதுமட்டுமல்லாமல் 2023 கொரியா ஓபனையும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த இந்தியாவின் அழிவின் சகோதரர்களின் அடுத்த இலக்கு தற்போது 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடராக மாறியுள்ளது.
தங்களுடைய அடுத்த இலக்காக 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் தங்கத்தை குறிபார்த்திருக்கும் “சாத்விக்-சிராக்” இணை நிச்சயம் பதக்கத்தை நாட்டிற்கு எடுத்துவரும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது.
அந்தவகையில் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் இவர்கள், ஒலிம்பிக் வரலாற்றில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் இணை என்ற சாதனையை படைத்துள்ளனர்.
குரூப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கடைசி 8 இடங்களுக்குள் தங்களது இருப்பை உறுதிசெய்திருந்த இந்திய இணை, ரியான்-ஃபஜர் மற்றும் கோர்வி-லாபார் இணைகள் மோதிய ஆட்டத்தில் கோர்வி-லாபார் தோல்வியடைந்த பிறகு காலிறுதிக்கான தங்களுடைய இடத்தை ’சாத்விக்-சிராக்’ இணை உறுதிப்படுத்தியுள்ளது.
தங்களுடைய கடைசி குரூப் போட்டியில் இந்தோனேசியாவின் ரியான் மற்றும் ஃபஜர் இணையை இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை எதிர்கொள்ளவிருக்கிறது. இறுதி குழுநிலை ஆட்டத்தில் வெற்றிபெறுபவர்கள் குழுவில் முதலிடத்தைப் பெறுவார்கள்.