வினேஷ் போகத், சாய்னா நேவால் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

“அவர் மீதும் தவறு இருக்கிறது”- வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து சாய்னா நேவால்

Prakash J

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவில், மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியவர் இந்திய வீராங்கனை வினேஷ் போகத். இதன்மூலம், ஒலிம்பிக்கில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார் அவர்.

இப்படியாக இந்தியாவுக்கு இன்னொரு பதக்கத்தையும் நேற்று முன்தினம் (ஆக 7) இந்திய நேரப்படி இரவு 11 மணியளவில் உறுதிசெய்தார். இதற்காக இந்திய ரசிகர்கள் அவரை வாழ்த்திக் கொண்டிருந்த வேளையில், கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி ஒலிம்பிக் கமிட்டியால் நேற்று (ஆக. 8) காலை 11 மணி அளவில் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகத்

கடைசி நேரத்தில் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இந்தியர்களின் இதயங்களை நொறுங்கச் செய்துள்ளது. பல இந்தியரும் வினேஷுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, நடந்த சம்பவங்களின் எதிரொலியாக இன்று (ஆக 8) காலை வினேஷ் போகத் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்த நிலையில், “வினேஷ் போகத் மீதும் தவறு இருக்கிறது” என பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனையும் பாஜகவைச் சேர்ந்தவருமான சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். இது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “வினேஷ் போகத் ஒரு போராளி. நிச்சயம் அவர் இந்த சரிவிலிருந்து மீண்டுவருவார். அவருக்கு எது சரி, எது தவறு என்பது நன்றாகவே தெரியும். எனக்கு மல்யுத்தத்தில் என்ன நடக்கும் என்பதெல்லாம் தெரியாது. அவர் என்ன தவறு செய்தார் என்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஒரு தவறு நடந்திருக்கக்கூடாது. இதுபோன்ற வீராங்கனைகள் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் இந்த தவறை செய்திருக்கக் கூடாது. இது எப்படி நடந்தது என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அவர், தனது மூன்றாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இருக்கிறார்.

வினேஷ் போகத்

அப்படி இருக்கும்போது விதிகள் நிச்சயம் தெரிந்திருக்கும். என்னைக் கேட்டால் வினேஷ் போகத் மீதும் தவறு இருக்கிறது. மற்றவர்கள் மீது பழி சுமத்துவதை விட, வினேஷ் போகத்தும் இந்தப் பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு பெரிய போட்டிக்கு முன்பு இந்த தவற்றை அவர் செய்திருக்கக் கூடாது.

வினேஷ் போகத் எடை அதிகரித்து இருக்கிறது என்று ஏன் யாரும் அவரை எச்சரிக்கை செய்யவில்லை? இதற்கு வினேஷ் போகத் அல்லது அவருடைய பயிற்சியாளர்தான் பதில் சொல்ல வேண்டும். நமக்கு ஒரு பதக்கம் போய்விட்டதே என்ற ஏமாற்றம்தான் எனக்கு அதிகமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.