வினேஷ் போகத், சச்சின் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

”வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் பெற தகுதியானவர்”- முக்கிய பாய்ண்ட் உடன் சச்சின் கொடுத்த ஆதரவுக்குரல்!

Prakash J

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவில், மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி ஒலிம்பிக் கமிட்டியால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே, வினேஷ் போகத் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்த விவகாரம் உலக அளவில் பேசுபொருளாகி வரும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது. வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

வினேஷ் போகத் விவகாரம் உலகம் முழுவதும் பேசுபொருளாகி வரும் நிலையில், பலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட்டின் கடவுள் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், வினேஷுக்கு ஆதரவாகவே பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் அவர், ”வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்பே எடையின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு விளையாட்டுக்கும் விதிகள் உள்ளன, அந்த விதிகள் சூழலில் வைத்து பார்க்கப்பட வேண்டும், சில சமயங்களில் மறுபரிசீலனை செய்யப்படலாம். செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளின் பயன்பாடு போன்ற நெறிமுறை மீறல்களுக்காக ஒரு தடகள வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். அப்படியானால், எந்தப் பதக்கமும் வழங்கப்படாமல், கடைசி இடத்தைப் பிடித்திருப்பது நியாயமானதாகவே இருக்கும்.

வினேஷ் தனது எதிரிகளை நியாயமான முறையில் தோற்கடித்து முதல் இரண்டு இடங்களை எட்டினார். அவர் நிச்சயமாக வெள்ளிப் பதக்கத்திற்கு தகுதியானவர். விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம். ​​வினேஷ்க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உடலுறவுக்கு கட்டணம் வசூலித்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவர்.. நிராகரித்த உயர்நீதிமன்றம்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், “வினேஷ் போகத் 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. 100 கிராம் எடை என்பது பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லாதது போல் இருக்கலாம். ஆனால், ஒலிம்பிக் விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான். வெளிப்படையாக ஒரு தடகள வீராங்கனையாக, அவர் நிறைய கடந்து செல்ல வேண்டும். இந்த கடினமான காலகட்டத்தில் நாங்கள் அவருடன் நிற்கிறோம், அவர், ஒருநாள் மீண்டு வருவார் என்று நம்புகிறோம், ஏனென்றால், இந்தியாவுக்கான பதக்கம் பெறுவதற்கு அருகில் இருந்ததால் இதை யாரும் கடந்து செல்வது மிகவும் கடினம். தங்கப் பதக்கத்துடன் அவரைப் பார்க்காதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது, ஆனால் அவர் எங்கள் தங்கப் பதக்கம், அவர் நம் பெருமை, அவர் தேசத்தின் ஹீரோ" எனத் தெரிவித்திருந்தார்.

வினேஷ் போகத்

இவர்களைத் தவிர கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் யூசுப் பதான் மற்றும் இர்பான் பதான், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, அமித் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். என்றாலும், பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், வினேஷ் மீதும் தவறு இருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையும் படிக்க: 9 வயது சிறுமிக்கும் திருமணம் செய்யலாம்.. சர்ச்சைக்குரிய மசோதாவை தாக்கல் செய்த ஈராக்!