நீரஜ் சோப்ரா, ரிஷப் பண்ட் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

“நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் உங்களுக்கு ரூ.1 லட்சம்” - வித்தியாசமாக பரிசு அறிவித்த ரிஷப் பண்ட்!

Prakash J

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவில், இந்திய அணி சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்று போட்டிகளில் பங்கேற்று திறமையை நிரூபித்து வருகின்றனர். இதுவரை இந்தியா மூன்று வெண்கலப் பதக்கங்களை மட்டுமே வென்று 68வது இடத்தில் உள்ளது.

இந்தச் சூழலில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தருவார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத், 100 எடை கூடியதாக கூறி, ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது விமர்சனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. என்றாலும், இந்தியாவுக்காக அடுத்த தங்கப் பதக்கத்தை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பெற்றுத் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது. முன்னதாக, ஒலிம்பிக் தொடரில் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா அபாரமாகச் செயல்பட்டு 89.94 மீட்டர் தூரத்தில் ஈட்டியை எறிந்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். மேலும், முதல் சுற்றில் அதிக தூரம் வீசிய வீரர்களில் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்திருக்கிறார் என்பதால் அவர் தங்கம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நம்பிக்கையில்தான் நீரஜ் சோப்ராவுக்கு ஆதரவு தெரிவித்து பலரும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டும் கருத்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றால் எனது ட்விட்டை லைக் செய்து அதிகமாக கமெண்ட் செய்யும் நபர்களைத் தேர்ந்தெடுத்து, அதில் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 1,00,089 ரூபாய் ரொக்கமாக நான் பரிசு தருகிறேன். என்னுடைய கவனத்தை ஈர்க்கும் அடுத்த 10 பேருக்கு நான் இலவச விமான டிக்கெட்டுகளை வாங்கித் தருகிறேன். என்னுடைய சகோதரன் நீரஜ் சோப்ராவுக்காகவும் நமது இந்தியாவுக்காகவும் ஆதரவு அளிப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.

ரிஷப் பன்ட்டின் இந்த அறிவிப்பை ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரிஷப் பண்ட்டின் பதிவை டேக் செய்திருக்கும் நெட்டிசன்கள் சிலர், தங்கள் பங்குக்கு தொகையைத் தருவதாக அறிவித்துள்ளனர். அதில் பயனர் ஒருவர், 5 அதிர்ஷ்டஷாலிகளுக்கு ரூ.6080 தருவதாகவும், மற்றொரு பயனர் ஓர் அதிர்ஷ்டஷாலிக்கு ரூ.7007 தருவதாகவும் அறிவித்துள்ளார். இன்னும் பலரும்கூட இதேபோல தங்கள் பங்கு தொகையை தருவதாக கூறி வருகின்றனர்.