வினேஷ் போகத் ஒலிம்பிக்ஸ்
ஒலிம்பிக்ஸ்

ஏமாற்றம்.. வினேஷ் போகத்தின் மேல்முறையீடு தள்ளுபடி.. பதக்கம் கிடைக்க வாய்ப்பில்லை?

100 கிராம் கூடுதல் எடை அதிகமாக இருந்ததால் மல்யுத்தம் 50 கி எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் விளையாட அனுமதிக்கப்படாத நிலையில், வெள்ளிப்பதக்கத்தை உறுதிசெய்யும்படி சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Rishan Vengai

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானின் நம்பர் 1 வீராங்கனையான சுசாகியை வீழ்த்தி இறுதிப்போட்டிவரை முன்னேறினார். ஆனால் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்தியாவின் வினேஷ் போகத், கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட 100 கிராம் அதிமாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி எப்படியும் தங்கம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்த இந்திய ரசிகர்களின் தலைமேல் இடியை இறக்கியது. தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் பதக்கம் பறிபோவதுடன், தரவரிசைபட்டியலிலும் கடைசி இடத்துக்கு தள்ளப்படுவார் என்ற தகவல் மேலும் ரசிகர்களை வேதனை படுத்தியது.

வினேஷ் போகத்

அரையிறுதிப்போட்டிக்கு பிறகு 52.7 கிலோ இருந்த வினேஷ் போகத், இரவு முழுவதும் தூங்காமல் ஜாக்கிங், ரன்னிங், ஸ்கிப்பிங், வெயிட் லிஃப்டிங் என அனைத்தையும் செய்து எடையை குறைக்க போராடினார். இறுதியில் தலைமுடியை வெட்டியும், ரத்தத்தை வெளியேற்றியும் எடைக்குறைப்பு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவரால் 100கிராம் எடையை குறைக்க முடியவில்லை.

வினேஷ் போகத்

உடல் எடைக்குறைப்பால் பலவீனமடைந்த வினேஷ் போகத், மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தகுதிநீக்கம் உறுதி, பதக்கம் கிடைக்காது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத வினேஷ், “நான் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதற்குமேல் போராட எனக்கு சக்தி இல்லை” என்று கூறி தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘இறுதிப்போட்டியில்-தானே தகுதிநீக்கம், அரையிறுதிப்போட்டிவரை விதிமுறைகளின் கீழ் விளையாடிய அவருக்கு வெள்ளிபதக்கத்தையாவது கொடுங்கள்’ என்ற கோரிக்கையை எழுப்பினர்.

மேல்முறையீட்டில் மனு தள்ளுபடி..

வினேஷ் போகத்துக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்த நிலையில், இறுதிப் போட்டி வரை முன்னேறியதால் வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் சார்பில் இந்திய ஒலிம்பிக் மனுத்தாக்கல் செய்தது.

வினேஷ் போகத்

வினேஷ் போகத்தின் மனுவை எடுத்துக்கொண்ட சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம், மனுமீதான தீர்ப்பினை ஒலிம்பிக் முடிவதற்குள் அளிப்பதாக கூறி தள்ளிவைத்தது. அப்படி ஆக.11 அன்று அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அதை ‘ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும்’ என இரண்டாவது முறையாக தள்ளிவைத்தது. பின் நேற்றும் தீர்ப்பு வழங்காமல் மீண்டும் 3 நாட்களுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என மூன்றாவது முறையாக தள்ளிவைக்கப்பட்டது.

வினேஷ் போகத்

இதற்கிடையில் இந்தியாவுக்கான ஒலிம்பிக் வென்றவர்கள் பட்டியலில் வினேஷ் போகத்தை இணைத்திருந்த ஜியோ சினிமா, திடீரென வினேஷ் போகத்தை விட்டுவிட்டு 6 வீரர்களை மட்டுமே வைத்து போஸ்டர் போட்டது. மேலும் இந்திய ஒலிம்பிக் தலைவர் பிடி உஷா, வினேஷ் போகத்தை எடையை கட்டுக்குள் வைக்காததற்கு குற்றஞ்சாட்டினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் வினேஷ் போகத்தின் வெள்ளிப்பதக்கத்திற்கான மேல்முறையீட்டு மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்டிருக்கும் பதிவில், வினேஷ் போகத்தின் மனுவை தள்ளுபடி செய்தது ஏமாற்றமளிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பிடிஉஷா தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளிப்பதக்கம் வினேஷுக்கு கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் ஆலோசிப்போம் என இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.