reetika hooda twitter
ஒலிம்பிக்ஸ்

No.1 உலக வீரரை 1-1 என திணறடித்த ரித்திகா ஹூடா.. சமன்செய்த போதும் ஏன் தோல்வி? வேறு வாய்ப்பு உள்ளதா?

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 76கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தின் காலிறுதிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் ரித்திகா ஹூடா, நம்பர் 1 வீராங்கனைக்கு எதிராக போட்டியை சமன்செய்த போதிலும் டெக்னிக்கல் ரூலின் படி தோல்விபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Rishan Vengai

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து பாரீஸ் சென்ற 117 பேர் கொண்ட குழு 69 பதக்கப்போட்டிகளில் பங்கெடுத்து விளையாடிவரும் நிலையில், இதுவரை இந்தியா ஒரு வெள்ளி 4 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

மனு பாக்கர், சரப்ஜோத்

இந்தியாவின் பதக்கப்பட்டியலை பொறுத்தவரையில், 

  • துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலங்களும்,

  • துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே ஒரு வெண்கலம்,

  • இந்திய ஹாக்கி அணி ஒரு வெண்கலம் மற்றும்

  • ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் 

என முதலில் 5 பதக்கங்கள் பதிவுசெய்யப்பட்டது.

நீரஜ் சோப்ரா

இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவு வெண்கலத்திற்கான போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத், இந்தியாவிற்காக 6வது ஒலிம்பிக் பதக்கத்தை உறுதிசெய்தார்.

அமன் ஷெராவத்

இத்தகைய சூழலில்தான் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதிசெய்யும் வகையில் இந்திய மல்யுத்த வீராங்கனை ரித்திகா ஹூடா மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.

நம்பர் 8 வீராங்கனையை வீழ்த்திய இளம் வீராங்கனை..

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தம் 76கிலோ எடைப்பிரிவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய மல்யுத்த வீராங்கனை ரித்திகா ஹூடா, ஹங்கேரியின் பெர்னாடெட் நாகியை எதிர்கொண்டு விளையாடினார்.

போட்டியில் தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய 21 வயது வீராங்கனையான இந்தியாவின் ரித்திகா, உலகின் நம்பர் 8 வீராங்கனையான நாகியை 12-5 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ரித்திகா 54-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக்கில் 76 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

காலிறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான கிர்கிஸ்தானின் ஐபெரி மெடெட் கைசியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் மிகப்பெரிய சவால் காத்திருந்தது.

நம்பர் 1 உலக வீராங்கனையை திணறடித்த ரித்திகா..

பெண்களுக்கான மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் 54வது தரவரிசையில் இருக்கும் இந்தியாவின் ரித்திகாவும், நம்பர் 1 தரவரிசையில் இருக்கும் கிர்கிஸ்தானின் ஐபெரி மெடெட் கைசியும் எதிர்கொண்டு விளையாடினார்.

நம்பர் 1 வீராங்கனைக்கு கடுமையாக டஃப் கொடுத்த ரித்திகா முதல் பாய்ண்ட் எடுத்து 1-0 என முன்னிலை பெற்றார், அவரைத்தொடர்ந்து பாய்ண்ட் எடுக்க போராடிய கைசி ஒரு பாய்ண்ட் எடுத்து 1-1 என சமன்செய்தார்.

அதற்குபிறகு இறுதிவரை இரண்டு வீரர்களும் புள்ளியை எடுக்காத நிலையில் மல்யுத்தத்தின் டை-பிரேக் விதிமுறையின் படி கடைசியாக புள்ளிகள் எடுத்த வீரர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

இதைப்பார்த்த இந்திய ரசிகர்கள் ‘இதுலாம் என்ன விதிமுறை?, எங்களுக்குனே வருவீங்கிளா?’ என்பது போன்ற அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். எப்படியிருப்பினும் தற்போது வெற்றிபெற்ற கைசி இறுதிப்போட்டிக்கு செல்லும் பட்சத்தில் ரீப்பேஜ் சுற்று மூலம் வெண்கலத்திற்காக மோதும் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ரித்திகா U-23 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ரித்திகா அவருடைய எடைப்பிரிவில் அதிகம் பெண் வீராங்கனைகள் இல்லாததால் ஆண் மல்யுத்த வீரர்களுடன் மோதி பயிற்சி பெற்றுவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.