2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்க வேட்டையை தொடங்கியிருக்கும் உலகநாடுகளுக்கு இடையே, 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை வென்று தன் கணக்கை துவங்கியுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர், கலப்புப் பிரிவிலும் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்காக ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இரண்டு பதக்கங்களுடன் தொடர்ந்து இந்திய அணி தங்களுடைய பதக்க கணக்கை உயர்த்தும் வகையில் போராடி வருகிறது.
அந்தவகையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் மற்றும் 2016 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்றவரான பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, நடப்பு 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் தன்னுடைய மூன்றாவது ஒலிம்பிக் பதக்கத்தை தேடும் முனைப்பில் இறங்கியுள்ளார்.
இதையும் படிக்க: ஒலிம்பிக்கில் இன்று IND: 3வது பதக்கத்தை தேடும் மனு பாக்கர்! டேபிள் டென்னிஸ்ஸில் வரலாறு படைத்த மணிகா!
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது மற்றும் கடைசி குரூப் M போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்த்து விளையாடினார். நடைபெற்ற போட்டியில் உலக தரவரிசையில் 73வது இடத்தில் இருக்கும் கிறிஸ்டினுக்கு 13வது தரவரிசையில் இருக்கும் பிவி சிந்துவை எதிர்கொண்டு விளையாடுவது பெரிய சவாலாக இருந்தது.
தொடக்கத்தில் 2-0 என குபா முன்னிலை பெற்றாலும், பிவி சிந்துவின் அனுபவத்திற்கு முன் அவரால் அதற்குமேல் எதுவும் செய்ய முடியாமல் போனது. முதல் சுற்றை 21-5 என சுலபமாக வென்ற பிவி சிந்து, இரண்டாவது சுற்றை 21-10 என வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இதுவரை அதிகபட்சமாக 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற 4 இந்திய வீரர்களில் ஒருவராக இருக்கும் பிவி சிந்து, இந்தியாவிற்காக அதிக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் வீரராக வரலாறு படைக்கும் இடத்திற்கு செல்ல இன்னும் இரண்டு அடிகளே பின்தங்கியுள்ளார்.
நடப்பு ஒலிம்பிக்கில் முதல் குழு போட்டியில் 21-9 21-6, இரண்டாவது போட்டியில் 21-5 21-10 என டாமினேட் செய்துவரும் பிவி சிந்து நிச்சயம் 3வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்று வரலாறு படைப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இதையும் படிக்க: காலிறுதியில் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா.. ஆனால் பதக்கம் வெல்வதில் பெரிய சிக்கல்?