பாரிஸ் ஒலிம்பிக் எக்ஸ் தளம்
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்: 140 சைபர் தாக்குதல்கள் பதிவு.. பிரான்ஸ் அதிகாரிகள் தகவல்!

பாரிஸ் ஒலிம்பிக்கின்போது 140க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் பதிவாகி உள்ளதாகவும், ஆனால் அவை எதுவும் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Prakash J

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா, கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து பதக்கங்களை வேட்டையாடினர்.

இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில், அவர்கள் 5 வெண்கலம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்துடன் 6 பதக்கங்களைக் கைப்பற்றினர். இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியின் தொடக்கம் முதல் 140க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் பதிவாகி உள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்திலும், அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் ஏற்பாட்டுக் குழு, டிக்கெட் அல்லது போக்குவரத்தை சீர்குலைக்கும் திறன் கொண்ட தாக்குதல்களை எதிர்கொள்ள பிரான்சின் சைபர் பாதுகாப்பு நிறுவனம் அதிக எச்சரிக்கையுடன் இருந்தது.

ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 11க்கு இடையில், அரசாங்க இணைய பாதுகாப்பு நிறுவனமான Anssi குறைந்த தாக்கம் கொண்ட பாதுகாப்பு நிகழ்வுகள் தொடர்பான 119 அறிக்கைகளையும், 1 தீங்கிழைக்கும் தாக்குதல் மூலம் சம்பந்தப்பட்டவரின் தகவல் அமைப்பை வெற்றிகரமாக குறிவைத்த 22 சம்பவங்களையும் பதிவு செய்தது. இந்த தாக்குதல்கள் முக்கியமாக அரசு நிறுவனங்கள், விளையாட்டு, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளை குறிவைத்ததாக ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: வினேஷ் போகத் வழக்கு| மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது ஏன்? விளக்கம் தந்த வழக்கறிஞர்!

Anssiஇன் கூற்றுப்படி, அவற்றில் மூன்றில் 1 பங்கு செயலிழந்த நேர சம்பவங்கள், அவற்றில் பாதி சேவை மறுப்புத் தாக்குதல்களால் சேவையகங்களை மூழ்கடிக்க வடிவமைக்கப்பட்டன. மற்ற இணைய சம்பவங்கள் முயற்சி அல்லது உண்மையான சமரசங்கள் மற்றும் தரவு வெளிப்படுத்தல் போன்றவற்றுடன் தொடர்புடையவை.

பாரிஸில் ஒலிம்பிக் நிகழ்வுகளை நடத்திய Grand Palais மற்றும் பிரான்சில் உள்ள சுமார் 40 அருங்காட்சியகங்கள் ஆகஸ்ட் தொடக்கத்தில் ransomware தாக்குதலால் பாதிக்கப்பட்டன. ஆனால் இது விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள எந்த தகவல் அமைப்புகளையும் பாதிக்கவில்லை என்று Anssi தெரிவித்துள்ளது. பொதுவாக, ransomware கணினி அமைப்புகளை குறியாக்க மற்றும் தடுக்க பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்துகிறது. அவற்றை மீட்டெடுக்க, ஒரு பயனர் அல்லது நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட தொகையை கோருகிறது. இது ஒலிம்பிக் போன்ற உலக நிகழ்வின்போது அதிகரிக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கின்போது, ​​அமைப்பாளர்கள் 450 மில்லியன் ரான்ஸம்வேர் செயல்பாடுகளை அறிவித்திருந்தனர். இது, 2012 லண்டன் ஒலிம்பிக்கைவிட இருமடங்கு அதிகமாகும்.

முன்னதாக, போட்டி தொடங்கும் நாளன்று (ஜூலை 26) பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் வழித்தடங்களில் ஒரேநேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது. பிரான்ஸின் அதிவேக ரயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கினர். இந்தப் பரபரப்பு சம்பவத்தால் பல வழித்தடங்கள் பாதிக்கப்பட்டதுடன், ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன. இன்னும் சில வழித்தடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். பின்னர் பாதிப்புகள் மெல்ல மெல்ல சரிசெய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. அடுத்து ஜூலை 29ஆம் தேதி, பிரான்ஸ் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது. பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் செல்போன் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அப்போது தகவல்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை: பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்.. மனு தாக்கல் செய்த பெற்றோர்