India Hockey pt desk
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்|இந்திய ஹாக்கி அணியின் கனவு நாயகன்; கோல்போஸ்டில் இரும்புக்கோட்டையாய் நின்ற ஶ்ரீஜேஷ்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் கனவு நாயகனாக மிளிர்ந்து வரும் ஸ்ரீஜேஷை ரசிகர்கள் பாராட்டு மழையில் நனைத்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

webteam

பாரிஸ் ஒலிம்பிக்கில் பி.வி.சிந்துவில் தொடங்கி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல நம்பிக்கை நட்சத்திரங்களும் பதக்க வாய்ப்பை இழந்துவிட்டனர். ஆனாலும் ஹாக்கியில் இந்தியா பதக்கம் வெல்லும் அதுவும் தங்கம் வெல்லும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பிஆர் ஸ்ரீஜேஷ்.

இந்தியாவுக்கும் கிரேட் பிரிட்டனுக்கும் இடையிலான காலிறுதி ஆட்டம் அனல் பறக்க நடந்த நிலையில் அதில் ஸ்ரீஜேஷ் இரும்புக்கோட்டையாய் இருந்து இந்திய அணியை காத்தார். பிரிட்டன் வீரர்களின் அலையலையான தாக்குதல்கள் இந்த கேரள வீரனின் முன் எடுபடவில்லை. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முடிவு கிடைக்காத நிலையில் பெனால்டி ஷூட்அவுட் கடைபிடிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டி

இதில் பிரிட்டன் வீரர்களின் நேர்த்தியான நகர்த்தல்களை சாதுர்யமாக முறியடித்து இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார் ஸ்ரீஜேஷ். ஆட்டம் முடிந்த பின் பயிற்சியாளர் ஃபுல்டன் ஓடி வந்து ஸ்ரீஜேஷை இறுகக் கட்டிப்பிடித்த பாராட்டு மழையில் நனைவித்தார். சக வீரர்களும் ஸ்ரீஜேஷை கொண்டாடினர்.

மறுபுறம் சமூகத் தளங்களில் ஓவர் நைட்டில் மெகா ஹீரோ ஆகிவிட்டார் ஸ்ரீஜேஷ். எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் சரி இது போன்ற போட்டியை காண முடியாது என ஸ்ரீஜேஷை சிலாகித்து தள்ளினர் ரசிகர்கள். இந்தியா ஹாக்கியில் தங்கப்பதக்கம் வெல்ல 2 வெற்றிகள் மட்டுமே இடையே நிற்கின்றன. இந்த சவால்களை கடந்து இந்தியா சாதிக்கும் என தீவிரமாக நம்புகின்றனர்.

ஹாக்கியை எப்படி விளையாட வேண்டும் என உலகிற்கே பாடம் எடுத்த இந்திய அணியின் நிலைமை 1980-க்குப் பிறகு தலைகீழாக மாறிப்போனது... இழந்த பெருமை மீளுமா என ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் எதிர்நோக்கிய ஒட்டுமொத்த தேசத்தின் கனவு 41 ஆண்டுகளுக்குப் பிறகே நனவானது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்.

ஸ்ரீஜேஷின் பயணம் அவ்வளவு எளிதானதாக அமைந்துவிடவில்லை. கால்பந்து கோலோச்சும் கேரளாவில் ஹாக்கி கிளவுஸை கையில் ஏந்தினார் ஸ்ரீஜேஷ்... வீட்டில் இருந்த பொருளாதார ஆதாரமான பசு மாட்டை விற்று ஸ்ரீஜேஷ்க்கு ஹாக்கி கிட்டை வாங்கிக் கொடுத்தார் அவரது தந்தை. அதுவே அவரது மனதில், எதையாவது சாதித்தாக வேண்டும் என்ற நெருப்பை விதைத்தது.

India Hockey Team

தனது அபார திறமையால், 2006ஆம் ஆண்டே இந்திய அணியில் இடம்பெற்றாலும், சீனியர் வீரர்கள் நிறைந்த அணியில் ஸ்ரீஜேஷ் தனது திறமையை நிரூபிக்க காத்திருக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2009-ல் கோல் கீப்பர் பல்ஜித் சிங்கின் கண்ணில் ஏற்பட்ட காயம் ஸ்ரீஜேஷின் இருளை நீக்கியது.

கிடைத்த வாய்ப்பை, கிளவுஸ் மாட்டிய தனது இரு கைகளாலும் கெட்டியாக பிடித்துக் கொண்ட அவர் அதன் பிறகு இந்தியாவின் முதன்மை தேர்வாகிப் போனார். கோல் கீப்பரின் பணி பந்தை தடுப்பது மட்டுமே அல்ல... ஆட்டத்தை போக்கை கணிப்பதும், தடுப்பாட்டக் காரர்களுக்கு சரியான கட்டளையிடுவதும் கோல் கீப்பரின் திறமைக்குச் சான்று.

இந்திய ஹாக்கியின் நட்சத்திரமாக உருவெடுத்தாலும், 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி அவரை புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இரண்டு பெனால்டிகளை தடுத்து தேசத்தின் ஹீரோவாக மாறினார் ஸ்ரீஜேஷ்... 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும் இந்திய அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவரும் ஸ்ரீஜேஷ் தான்.

2021, 2022ஆம் ஆண்டுகளில் சிறந்த கோல்கீப்பருக்கான விருதுகளை வழங்கி அவரை கவுரவித்தது சர்வதேச ஹாக்கி சம்மேளனம்... இந்தியாவின் மிக உயரிய விருதான தயான் சந்த் கேல் ரத்னாவும், ஹாக்கி நாயகனின் கைகளில் தவழ்ந்தது. இவை எல்லாவற்றிலும் மேலாக அவர் கருதுவது 2021ஆம் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் ஏந்தியதைத் தான்.

ஸ்ரீஜேஷ்

3ஆம் இடத்திற்கான போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனியை 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 41 ஆண்டுகால பதக்க தாகத்தை தணித்தது இந்தியா... அந்த போட்டியில் தன் பக்கம் வரும் பந்துகளை அநாயசியமாக தடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் இந்தியாவின் எல்லைக் காப்பான். அவர் வெற்றிக் களிப்பில் கோல் கம்பத்தின் மீது ஏறி கம்பீகரமாக போஸ் கொடுத்ததை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.

மணிமகுடங்கள் தரித்த தனது 18 ஆண்டுகால ஹாக்கி வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார் ஸ்ரீஜேஷ். தனக்காக பல தியாகங்களை செய்த தனது குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரம் இது எனக் கூறிய அவர், ஹாக்கியை வளர்க்க அடிமட்ட அளவில் இருந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என புன்முறுவல் பூத்தார்.

கடைசியாக ஒருமுறை பாரிஸ் ஒலிம்பிக்கில் களம் காணவுள்ள இந்திய ஹாக்கியின் ஜாம்பவானை, தங்கப் பதக்கத்துடன் வழியனுப்புவோம் என இந்திய அணியினரும் சூளுரைத்துள்ளனர். இந்திய அணியை அரண்போல் காத்த ஜாம்பவான் ஸ்ரீஜேஷ், சாதனை பதக்கத்துடன் விடைபெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. கோடானுகோடி ரசிகர்கள். மேலும் இந்த ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற உள்ள ஹாக்கி எல்லைச்சாமி ஸ்ரீஜேஷிற்கு அதை விடவும் சிறந்த வழியனுப்புதல் வேறு எதுவும் இருக்க முடியாது.