ரமிதா ஜிண்டல், மணிகா பத்ரா pt web
ஒலிம்பிக்ஸ்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: அடுத்த சுற்றுகளில் நீடிக்கும் இந்திய வீரர்கள் யார்? வெளியேறியவர்கள் யார்?

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை முத்தமிட்டு வரலாறு படைத்துள்ளது.

PT WEB

செய்தியாளர் சந்தானம்

இந்தியாவிற்கு முதல் பதக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை முத்தமிட்டு வரலாறு படைத்துள்ளது. அந்த முதல் பதக்கத்தை பெற்றுத் தந்திருக்கிறார் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அர்ஜூன் பபுட்டா, பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரமிதா ஜிண்டால் ஆகியோரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான முறையில் விளையாடினர். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்று, இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவில் முதல் பதக்கத்தை முத்தமிட்டார். இறுதிப்போட்டியில் 221.7 புள்ளிகள் பெற்று மனு பாக்கர் மூன்றாமிடம் பிடித்தார். தென்கொரியா வீராங்கனை ஏ ஜின் 243.2 புள்ளிகள் பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.

இறுதியில் தவறவிட்ட இளவேனில் வாலறிவன்

இதேபோல், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுட்டா 630.1 புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மேலும், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் ரமிதா ஜிண்டல், தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் ஆகியோர் பங்கேற்றனர். முதல் 5 சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்ட இளவேனில் வாலறிவன், இறுதி விநாடிகளில் முக்கிய புள்ளிகளை இழந்தார். 0.7 புள்ளிகளில் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அவர் இழந்தார். எனினும் முதல் நான்கு சுற்றுகளில் 10ஆவது இடத்தில் இருந்த ரமிதா ஜிண்டல், கடைசி இரண்டு சுற்றுகளில் சிறப்பாக விளையாடி, 631.5 புள்ளிகள் பெற்று, 5ஆவது இடம் பிடித்து பதக்கத்தை குறி வைக்கும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ரமிதா ஜிண்டல்

பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து, மாலத்தீவின் ஃபாத்திமாத் அப்துல் ரசாக்கை எதிர்கொண்டார். அரை மணி நேரமே நடைபெற்ற இந்தப் போட்டியில் பி.வி. சிந்து, 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டின் கூபாவை சிந்து எதிர்கொள்ள உள்ளார்.

முதல் போட்டியிலேயே வெளியேறிய சரத்கமல்

துடுப்பு படகு போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பல்ராஜ் பன்வர் காலிறுதி முன்னேறி பதக்கத்திற்கான ரேசில் தொடர்ந்து நீடிக்கிறார். குத்துச்சண்டையில், ஜெர்மனி வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் செரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

மணிகா பத்ரா

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் தங்களது போட்டிகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். தமிழ்நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவி வெளியேறினார்.