பாரிஸ் ஒலிம்பிக் தொடர் 2024ல், ஷட்டேரோக்ஸ் துப்பாக்கி சுடுதல் மையத்தில், பெண்களுக்கான 10 மீ ஏர்பிஸ்டல் இறுதிப் போட்டி நடந்தது. இதில்தான், வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையைப் பெற்றுத்தந்துள்ளார்.
அவர் 221.7 புள்ளிகளைப் பெற்று பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் மனு பாக்கர் படைத்துள்ளார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் மூன்று பிரிவுகளிலும் தோல்வி அடைந்திருந்தாலும், தற்போதைய தொடரில் தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இதனை அடுத்து அவர் 10 மீ ஏர் பிஸ்டல் இரட்டையர் பிரிவில் பங்கேற்கிறார்.
தென் கொரியாவைச் சேர்ந்த ஓ யே ஜின் 243.2 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இரண்டாம் இடத்தையும் தென் கொரியாவைச் சேர்ந்த கிம் யெஜி பெற்றுள்ளார். இவர் 241.3 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
பிரதமர் மோடி மனுபாக்கருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், “இது வரலாற்றுப் பதக்கம். இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக வாழ்த்துகள் மனு பாக்கர். இந்தியாவிற்காக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது” என தெரிவித்துள்ளார்.